காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

ஒரே நாளில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’, ‘காதல் சொல்ல ஆசை’ என காதலை டைட்டிலில் வைத்து வெளி வந்துள்ள படங்களில் உருகி உருகிக் காதலிக்கும் காதலர்கள் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வியே.

அடுத்தடுத்த நாட்களில் இந்த இரண்டு படங்களையும் பார்த் போது மனதுக்குள் எழுந்த கேள்விதான் அது. தலைப்பில் ‘காதல்’ படத்திற்குள் மட்டுமே சுமாரான காதல் இருந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், தலைப்பில் ‘காதல்’ என்பதை சேர்த்து வைக்கும் போது, அது கண்டிப்பாக கண் மூடித்தனமான காதல் படமாக இல்லையென்றாலும் பரவாயில்லை, கொஞ்சம் கலங்கை வைக்கும் காதல் இருந்தால் போதும், தலைப்பைப் பார்த்து உள்ளே வரும் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாறாமல் இருப்பார்கள்.

இந்த ‘காதல் சொல்ல ஆசை’ படத்தின் கதை இதுதான்.

போலீஸ் வேலையில் இருக்கும் அப்பா பேச்சைக் கேட்காமல், வீட்டை விட்டு வெளியேறி நண்பனுடன் தங்கி இருக்கிறார் அசோக். நாயகி வாஷ்னா அகமது-வின் காணாமல் போன மொபைல் போனை அசோக் திருப்பிக் கொடுக்க, இருவருக்குமிடையே நட்பு ஆரம்பமாகிறது. வாஷ்னா வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஓனர் ரவி ராகவேந்தரை யாரோ கொலை செய்ய முயற்சிக்க, அதில் இருந்து அவரைக் காப்பாற்றுகிறார். பின்னர் ரவி ராகவேந்தர் அசோக் மற்றும் அவரது நண்பர்களுக்கு அவரது நிறுவனத்தில் வேலை போட்டுத் தருகிறார்.

அங்கு தன் வாஷ்னாவுடனான தன் காதலை வளர்த்து வருகிறார் அசோக். ஆனால், காதலை சொல்லாமலே இருக்கிறார். இதனிடையே ரவி ராகவேந்தரின் மகன் மது ரகுராம், வாஷ்னா இருவரும் காதலர்கள் என்பதைத் தெரிந்து அசோக் அதிர்ச்சியடைகிறார். அதன் பின், அப்பா ஆசைப்படி நடந்து கொள்ள முடிவெடுத்து காவல் துறை தேர்வு எழுத ஊரை விட்டே வெளியேறுகிறார். இதன் பின் யாருடன் யார் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.

காதலைச் சொல்லாமலே பல படங்களில் தவித்த முரளி டைப் கதாபாத்திரத்தில்  அசோக். லேசாக நடிக்கச் சொன்னாலே கனமாக நடிப்பவர், இந்த படத்தில் ஏற்று நடித்துள்ள கனமான கதாபாத்திரத்தை விட்டு விடுவாரா என்ன ? காதலை சொல்ல முடியாத தவிப்பை தாறுமாறாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவரது நடிப்பில் பத்து சதவீதத்தைக் கூட கொடுக்க முடியாமல் திணறுகிறார் நாயகியான வாஷ்னா. எப்போதுமே சோகத்திலேயே இருப்பது போல் ஒரே மாதிரியான பாவனையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

இவர் ‘நல்லவரா, கெட்டவரா’ எனக் கேட்க வைக்கும் தோற்றத்தில்  மது ரகுராம். நடிப்பும், குரலும் மிடுக்காக இருக்கிறது. முயற்சித்தால் சிறந்த குணச்சித்திர, வில்லன் நடிகராகலாம். படத்தில் கெட்டவர் என்ற தோற்த்தில் ஒரு நல்லவர் இவர்.

‘பரதேசி’ வில்லன் ராஜேந்திரன் வழக்கமான ஒரு போல வில்லன். எம்.எஸ்.பாஸ்கரை அநியாயத்திற்கு வீணடித்திருக்கிறார்கள்.

காதல் படங்களில் சிறப்பான பாடல்கள் இருந்தால் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ்பாயின்டாக இருக்கும்.

கே.எஸ். தமிழ் சீனு, ஆசை ஆசையாக இயக்கி இருக்கிறார். அடுத்த படத்தில் அவரது ஆசை நிறைவேறட்டும்.

காதல் சொல்ல ஆசை – நிராசை…

 

 

Read Previous

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

Read Next

‘உத்தம வில்லன்’ – சூப்பர் ஸ்டாராக கமல்ஹாசன் ?