ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு காதல் திரைப்படம். ‘ஒரு காதல் ஒரு மோதல்’ என்ற அருமையான தலைப்பு. ஆனால், படத்தில் உருக வைக்கும் காதலும் இல்லை, ரத்தம் தெளிக்கும் மோதலும் இல்லை.

எதையோ சொல்ல முயற்சித்து, எங்கோ பயணிக்கிறது திரைக்கதை. முடிவில் ‘அபியும் நானும்’ படத்தின் எஃபெக்ட் வேறு வெளிப்படுகிறது. இன்னும் சின்சியராக முயற்சித்திருந்தால் ரசிக்க வைத்திருக்கலாம்.

விவேக் ராஜகோபால், இஞ்சினியரிங் படிப்பை முடித்து விட்டு, சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர். அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல், ஆனால், கடைசியில் குடும்பத்தினரின் நெருக்கடியில் அந்த பெண் விவேக்கை யாரென்றே தெரியாது என்று சொல்லி விடுகிறது.

இதனால், மனமுடையும் விவேக் ஒரு மாறுதலுக்காக பெங்களூருவில், ஒரு மீடியா பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராக வேலைக்குச்  சேர்கிறார். அங்கு படிக்கும் மாணவியான மேகாவை காதலிக்கிறார். இதன் பின் காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் ‘ஒரு மோதல் ஒரு காதல்’.

விவேக் ராஜகோபால், படத்தில் ஓவரான துள்ளலுடனே நடித்திருக்கிறார். விட்டால், சீரியசான காட்சிகளில் கூட சிரித்து விடுவார் போலிருக்கிறது. காதல், மோதல் நடிப்பை விட காமெடி நன்றாக வருகிறது. நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமா ஹீரோக்களின் வரிசையில் ஒரு இடத்தைப் பெறலாம்.

மேகா பர்மன், படத்தின் ஹீரோயின், ஆனால் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் வருகிறார். படத்திலேயே அவருக்கு தமிழ் பேசத் தெரியாத கதாபாத்திரம். அதனால், அதிகம் பேசாமல் சிரிப்பால் மட்டுமே, காதல் மொழி பேசுகிறார்.

படத்தில் விவேக் கூடவே சில நண்பர்கள் இருந்தாலும், அவர்கள் சிரிக்க வைக்க முயல்வதை விட, அப்பாவாக நடித்திருக்கும் ‘பிரமிட்’ நடராஜன் சில யதார்த்தமான வசனங்களால் சிரிக்க வைக்கிறார்.

அம்மா மீரா கிருஷ்ணன், அண்ணன் பாலாஜி மோகன், அண்ணி அம்மு மற்ற காட்சிகளில் நிறைவாக வந்துள்ள நட்சத்திரங்கள்.

இயக்குனர் டி.ஜி.கீர்த்தி குமார், பல குறும்படங்களை இயக்கியிருப்பார் போல. யுகாவின் ஒளிப்பதிவு கவர்ந்துள்ளது. கே.ஆர். கவின் இசையில் சில பாடல்கள் ‘ஹம்’ போட வைக்கின்றன.

‘ஒரு காதல் ஒரு மோதல்’ – உழைப்பே உயர்வுக்கு வழி.

 

Read Previous

ரஜினிகாந்த் பாராட்டிய ‘நான் சிகப்பு மனிதன்’

Read Next

காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

Most Popular