ஜன்னல் ஓரம் – விமர்சனம்

jannal ooram_00004 காதல், குடும்பம் என சென்டிமென்ட்டான கதைகளை தமிழ் சினிமாவில் மறந்து விட்ட நிலையில் இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஆர்டினரி’ படத்தின் ரீமேக்தான் என்றாலும் அதை தமிழ்ப்படுத்தியிருக்கும் விதம் அருமை. யாராவது ரீமேக் என்று சொன்னால் கூட தெரியாத அளவிற்கு இந்த படம் அமைந்துள்ளதற்குக் காரணம் இயக்குனர்தான். கதாபாத்திரங்களுக்கானத் தேர்வு, படத்தின் பின்னணி இவையிரண்டும் ஒன்றோடொன்று பொருத்தமாகப் பின்னிப் பிணைந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. பழனியிலிருந்து பண்ணைக்காடு என்ற மலைக்கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் பார்த்திபன் ஓட்டுனர், விமல் நடத்துனர். விமலுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மனிஷாவிற்கும் காதல் அரும்புகிறது. ஊர் தலைவர் ராஜேஷ் , அவரது மகன் சஞ்சய் பாரதியை அவரது நண்பர் மகளான பூர்ணாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஒரு நாள் பார்த்திபன் குடிபோதையில் இருக்க, நடத்துனரான விமல் ரிப்பேரான பேருந்தை ஓட்டி வர நேரிடுகிறது. அப்போது ஊரிலிருந்து வரும் சஞ்சய் பாரதி அந்த பேருந்து மோதி படுகாயமடைகிறார். செய்வதறியாது திகைக்கும் பார்த்திபன் ,விமல் , அவரை ஒரு ஜீப்பில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர். அதைப் பற்றி ஊரிலும் சொல்லாமல் மறைக்கின்றனர். ஆனால், சஞ்சய் பாரதி மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து இறந்து விட்டதாக போலீஸ் வந்து சொல்கிறது. ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் விமல் உண்மையை சொல்ல, போலீஸ் அவரைக் கைது செய்கிறது. பின்னர், ஜாமீனில் வெளி வரும், விமல், பார்த்திபனுடன் இணைந்து அவர் நிரபராதி என்பதை எப்படி நிரூபிக்கின்றனர் என்பதுதான் படத்தின் மீதி கதை. தமிழ் சினிமாவில் இப்படி யதார்த்தமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது. ஓட்டுனர் பார்த்திபன், நடத்துனர் விமல், ஆசிரியை பூர்ணா, வேலைக்குச் செல்லும் மனிஷா, அனைத்து வேலைகளையும் செய்யும் விதார்த், பூர்ணாவை திருமணம் செய்ய ஆசைப்படும் ரமணா,  ஊர் தலைவர் ராஜேஷ், விமலின் அம்மா யுவராணி, இப்படி அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப பொருத்தமான நடிகர்களையே தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். யாருமே கதாபாத்திரத்தை மீறி நடிக்காமல் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். குடித்துவிட்டு பார்த்திபன் பேருந்து ஓட்டுகிறார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதிலும் மலைப்பாதையில் வேறு பயணிக்கும் பேருந்து.  பார்த்திபன் கதாபாத்திரத்தில் கொஞ்சம் சமூக அக்கறையை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையமைத்துள்ள படம். ‘என்னடி என்னடி ஓவியமே…’ அருமையான டூயட் மெலடி. அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளது. கிராமத்துக் கதையில் வழக்கமாக காதல், பாசம், குடும்பத்துச் சண்டை இப்படியிருப்பதுதான் வழக்கம். இந்த படத்தில் ஒரு விபத்து, அதைத் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத ‘ட்விஸ்ட்’ என இடைவேளைக்குப் பின்னர் படம் ஒரு த்ரில்லராக மாறி விடுகிறது. கிளைமாக்சில் இவரா அதைச் செய்தது என நாம் எதிர்பார்க்காத ஒரு முடிவை வைத்து சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். ‘ஜன்னல் ஓரம்’ – கொஞ்சம் தென்றல்…கொஞ்சம் த்ரில்லர்…   தயாரிப்பு – ஹேமந்த் மூவீஸ் – முருகன் இயக்கம் – கரு. பழனியப்பன் இசை – வித்யாசாகர் பாடல்கள் – யுகபாரதி ஒளிப்பதிவு – அர்பிந்து சாரா படத்தொகுப்பு – சரவணா நடனம் – சிவசங்கர், விஜயகிருஷ்ணா சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன் கலை – ராஜீவன் மக்கள் தொடர்பு – நிகில் முருகன் நடிப்பு – பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, பூர்ணா, மனிஷா, சஞ்சய் பாரதி, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, சிங்கம் புலி மற்றும் பலர். வெளியான தேதி – 29 நவம்பர் 2013  

Read Previous

ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’…

Read Next

அஞ்சலி இடத்தைப் பிடித்த ஸ்ரீதிவ்யா…

Most Popular