ஹரிதாஸ் – விமர்சனம்

haridass தயாரிப்பு – டாக்டர் வி. ராம் புரொடக்ஷன்ஸ் –  Dr. வி. ராமதாஸ் கதை, திரைக்கதை, இயக்கம் – GNR. குமரவேலன் இசை – விஜய் ஆண்டனி ஒளிப்பதிவு – ரத்னவேலு படத்தொகுப்பு – ராஜா முகமது வசனம் – வெங்கடேசன் கலை – லால்குடி இளையராஜா பாடல்கள் – அண்ணாமலை சண்டைப் பயிற்சி – ராஜசேகர் நடனம் – அசோக்ராஜா மக்கள் தொடர்பு – நிகில் வெளியான தேதி – 22 பிப்ரவரி 2013 நடிப்பு – கிஷோர், சினேகா, பிரிதிவிராஜ் தாஸ், சூரி, பிரதீப் ராவத், யூகி சேது, ராஜ் கபூர் மற்றும் பலர்.

ரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அளவு கடந்த பாசம்தான் படத்தின் கதை. இதை அப்படியே நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் குமரவேலன். சில காட்சிகளில் நம்மையும் மீறி கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்து விடுவது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருப்பவர் கிஷோர். இவருடைய தலைமையில் பிரபல ரவுடியான பிரதீப் ராவத்தை என்கவுன்டர் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் கிஷோரின் அம்மா இறந்து விட அவர் பொறுப்பில் இருக்கும் தன் மகன் பிரிதிவிராஜ் தாஸை தன்னுடனே அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார் கிஷோர்.

பிரிதிவிராஜ் தாஸ் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவன். பத்து வயது வந்தும் இது வரை ஒரு வார்த்தை கூடப் பேசாதவன். அவன் என்ன நினைக்கிறான், என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. மனைவியை இழந்த நிலையில் மகனை ஒரு தாய் போலவே வளர்க்கிறார் கிஷோர்.

மகனின் வாழ்க்கைதான் முக்கியம் என நினைக்கும் கிஷோர், தன் காவல் துறை பணியில் விடுமுறை எடுத்து விட்டு, மகனை சினேகா ஆசிரியாராக இருக்கும் ஒரு மாநகராட்சிப் பள்ளியில் சிறப்பு மாணவனாக சேர்க்கிறார். சினேகாவுக்கும், பிரிதிவிக்கும் இடையில் நல்ல அன்பு ஏற்பட்டு விடுகிறது.

ஆட்டிசம் என்பது மிகப் பெரிய விஷயமில்லை, அப்படி இருப்பவர்கள் அசாதாரண திறமைசாலிகள் என டாக்டர் யூகி சேது உத்வேகம் கொடுக்க மகனிடம் உள்ள ஓடும் திறமையை அறிந்து அவனுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கிறார் கிஷோர்.

ஒரு நாள் திடீரென என்கவுன்டர் லிஸ்டில் இருக்கும் பிரதீப் ராவத்தை கிஷோர், பார்க்க நேரிட, அவரைத் துரத்திச் செல்கிறார். அன்றுதான் அவர் மகன் பிரித்வி முதன் முறையாக பங்கேற்கும் மாரத்தான் போட்டியும் நடக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.

இதுவரை வில்லனாகவே பார்த்து வந்த கிஷோரை இந்த படத்தில் ஒரு பாசமான அப்பாவாக நடிக்க வைத்ததற்கு இயக்குனரை பாராட்ட வேண்டும். சினேகா, கிஷோரை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்ல, அதை ஏற்க மறுத்து கிஷோர் பேசும் காட்சி ஒன்றே போதும், அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்ல.

அடுத்து மகனுக்கு பயிற்சி கொடுக்க மறுக்கும் ராஜ்கபூரிடம் பேசும் காட்சியிலும், மகனை மாரத்தானில் பங்கேற்க விடாமல் செய்யும் குழுவிடமும் கிஷோர் பேசும் காட்சியிலும், வசனம் எழுதிய வெங்கடேசனின் அழுத்தமான வார்த்தைகளுக்கு அழகாக உயிரூட்டி நம்மை அழ வைத்து விடுகிறார்கள். கீப் இட் அப் கிஷோர்….எதுக்கு வில்லனாலாம் நடிச்சிக்கிட்டு…..

இப்படி ஒரு பாந்தமான கதாபாத்திரத்திற்கு சினேகாவை விட்டால் யார் இருக்கிறார்கள். புடவையில் அச்சு அசலாக டீச்சராகவே மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மகனை பெற்ற தாய் கூட இந்த அளவுக்கு பாசமா பார்த்துக் கொள்வாரா என சந்தேகிக்கும் அளவிற்கு, பெறாத ஒரு மகன் மீது அவர் காட்டும் பாசம் , சினேகத்தின் உச்சக்கட்டம்.  ஆட்டிசம் பாதித்த  குழந்தைகளிடம் காட்டும் கனிவான பேச்சு, பார்வை அவர்களை சீக்கிரம் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விடும் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆட்டிசம் பாதித்த சிறுவனாக பிரித்விராஜ். எதுவுமே பேசாமல், யாரையுமே நேராக பார்க்காமல் , கையில் உள்ள குதிரையுடன் மட்டும் பேசாமல் பேசிக் கொண்டிருக்கும் அவனுடைய நடிப்பு ஆஹா…..இந்த ஆண்டின் தேசிய விருதுப் பட்டியலில் இப்போதே இவனுடைய பேரை தேர்வு செய்து விடுங்கள் தேர்வாளர்களே…கடைசியாக..அவன் சொல்லும் அந்த அப்பா என்ற ஒரு வார்த்தைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

கொஞ்ச நேரமே வந்தாலும் டாக்ராக வரும் யூகி சேது, தடகளப் பயிற்சியாளராக வரும் ராஜ் கபூரும் மனதில் பதிகிறார்கள். கிஷோர் டீமில் இருக்கும் மற்றவர்களிடமும் யதார்த்தமான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. ‘பரோட்டா’ சூரி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட கதையில் நகைச்சுவை என்பது தேவையில்லை.

காட்சிகளின் அழுத்தத்தை ஒளிப்பதிவின் மூலமும் உணர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பின்னசை இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாக இந்த படமும் நிச்சயம் இடம் பெறும்.

இப்படிப்பட்ட படங்களுக்கு நாம் மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது ,அரசும் ஆதரவு கொடுக்க வேண்டும். இப்படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதே நமது பேராவல். நிறைவேறுமா ?

Read Previous

‘தலைவா’ ஓமன் செல்கிறார்…

Read Next

இன்றைய ரிலீஸ்…

Most Popular