தமிழ் சினிமாவில் அவ்வப்போது பரபரப்பான த்ரில்லர் படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் சில படங்கள் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும் அளவிலான திரைக்கதையில் அமைந்து ரசிக்க வைக்கின்றன.
‘7 நாட்கள்’ படத்தில் அப்படி ஒரு பரபரப்பு திரைக்கதையில் இருக்கிறது. இயக்குனர் கௌதம் 7 நாட்களில் ஒரு கொலை சம்பவத்தைப் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்.
ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் சக்தி வாசு. அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர் நிகிஷா பட்டேல். தமிழ்நாட்டு முதல் மந்திரியையே மிரட்டும் அளவிற்கு மிகப் பெரும் கோடீசுவரரான பிரபுவின் மகன் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க நேரிட, அந்தக் கொலைக்கான விசாரணையில் சக்தி வாசுவும், நிகிஷா பட்டேலும் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம் இறங்குகிறார். எந்தத் தவறும் செய்யாத சக்தி வாசு, நிகிஷா பட்டேல் கணேஷ் வெங்கட்ராமிடம் மாட்டுகிறார்களா, உண்மைக் குற்றவாளி யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சக்தி வாசு படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால், நாயகனுக்குண்டான தோற்றத்தில்தான் அவர் இல்லை. மிகவும் குண்டாக ஏதோ ஒரு குணச்சித்திரக் கதாநாயகன் போன்றுதான் தெரிகிறார்.
அவருக்குப் போட்டியாக நிகிஷா பட்டேலும் குண்டாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் கொஞ்சமாக கிளாமரைக் காட்டி அதை மறக்க வைத்து விடுகிறார்.
கணேஷ் வெங்கட்ராம் தான் சைபர் கிரைம் விசாரணை அதிகாரி. ஆனால், ஒரு சைபர் கிரைம் அதிகாரி எப்படி ஒரு கொலைக் குற்றத்தை விசாரிக்கிறார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் மிகப் பெரும் பணக்காரராக பிரபு. படத்தின் ரசனையை எம்எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்தின் மொக்கை காமெடி குறைத்து விடுகிறது.
விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தினாலும், சஸ்பென்ஸ் அதிகம் வைக்காமல் விட்டுவிட்டார்கள். யார் குற்றவாளி என்பது கடைசி ரீலில் தெரிய வந்தால்தான் சஸ்பென்ஸுடன் ரசிக்க முடியும்.