அஜு கிழுமலா இயக்கத்தில், கிஷோர், ஜெய்பாலா, காவ்யா பெல்லு மற்றும் பலர் நடித்து ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வெளிவந்துள்ள படம்.
ஒரு காவல் நிலையத்திற்குள் ஒரு நாளுக்குள் நடக்கும் கதை. ‘ஒரே ஷாட்’ படமென்பதால் அதைப் படமாக்குவதற்கு நிறைய சிரமப்பட வேண்டும். படத்தையும் விறுவிறுப்பாகக் கொடுக்க வேண்டும். அதை முடிந்தவரையில் முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
நாவினிப்பட்டி காவல் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறார் ஜெய் பாலா. அந்த காவல் நிலையத்தில் உள்ள சீனியர் காவலர்களுக்குள் போட்டி, பொறாமை உண்டு. தனது பிறந்தநாளைக் கொண்டாட ஜெய் பாலாவின் காதலியான காவ்யா காவல் நிலையம் வருகிறார். ஒரு காதல் ஜோடி காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் தலைமைக் காவலரான சார்லி மின்சாரம் போன இடைவெளியில் யாராலோ கொல்லப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்க டெபுடி கமிஷனரான கிஷோர் வருகிறார். யார் சார்லியைக் கொன்றார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அனுபவம் வாய்ந்தவர்களே எடுக்கத் தயங்கும், நடிக்கத் தயங்கும் ‘ஒரே ஷாட்’ படத்தில் அனுபவம் குறைந்தவர்களை வைத்து இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குனர் அஜுவைப் பாராட்டலாம். படத்தின் பெயருக்கேற்றபடி ஆங்காங்கே டிராமாத்தனமான காட்சிகள் இருந்தாலும் ‘ஒரே ஷாட்’ படத்தில் அவற்றைத் தவிர்க்கவும் வாய்ப்பில்லை.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெய் பாலா, புதிதாகப் பதவிக்கு வந்ததால் விறைப்பாகவே நடந்து கொள்கிறார். அதே சமயம் அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவரே கொல்லப்பட்டதால், மேலதிகாரியான கிஷோரால் கண்டிக்கப்படுகிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் ஜெய் பாலா.
டெபுடி கமிஷனராக கிஷோர். அவர் வந்து கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. யார் கொலை செய்தார்கள் என்பதை நாம் யூகிக்க முடியாத அளவிற்குத் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். காவல் துறை அதிகாரியின் ஆளுமை எப்படியிருக்க வேண்டும் என்பதை இயல்பாய் வெளிப்படுத்தியுள்ளார் கிஷோர். தலைமைக் காவலராக சார்லி, அவரது நடிப்பில் அனுபவம் தெரிகிறது.
ஜெய் பாலாவின் காதலியாக காவ்யா, திமிர் பிடித்த காவலராக வின்சென்ட், மற்ற காவலர்களும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.
‘ஒரே ஷாட்’ படமென்பதால் கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷம்சுதீன். பின்னணி இசையமைத்துள்ளவர் பிஜிபால்.
புதிய முயற்சி என்பதால் சில குறைகளை மறந்து இதற்காக 180 நாட்கள், படக்குழுவினர் 80 பேர், நடிகர்கள், நடிகையர் 18 பேர் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.