தயாரிப்பு – ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பி. லிட்.,
இயக்கம் – பிஜாய் நம்பியார்
இசை – அனிருத், பிரசாந்த் பிள்ளை, மாடர்ன் மாஃபியா, மாட்டி பாணி, ரெமோ, ப்ராம்பதூரா
ஒளிப்பதிவு – ரத்னவேலு, பி.எஸ். வினோத்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் – வீ. இளங்கோ, ரெமோ பெர்ணாண்டஸ், மோகன் ராஜன், யுகபாரதி, ஜாய் சாந்தி
கலை – ராஜீவன்
சண்டைப் பயிற்சி – ஜாவீத் அசஸ்
மக்கள் தொடர்பு – நிகில்
வெளியான தேதி – பிப்ரவரி 1, 2013.
‘டேவிட் ’ – இரண்டு வாழ்க்கை ஒரு பெயர் ’ – இப்படித்தான் விளம்பரப்படுத்தறாங்க. ஆனால், படம் பார்க்கப் போனால் ‘டேவிட்’ – ஒரு பெயர் இரண்டு படம் னு சொல்ல வச்சிடறாங்க.
அது என்னன்னா, ‘பாதி’ தமிழ்ப் படம், ‘பாதி’ ஹிந்திப் படம். தியேட்டரை விட்டு வெளிய வர்றவங்க ஐயையயோ ஒரு டப்பிங் படம் பார்க்க வந்துட்டமோன்னுதான் பயப்படறாங்க.
சரி, விக்ரம், ஜீவா ரெண்டு பேரும் முதல் முறையா இணைந்து நடிக்கிறாங்க. மணிரத்னம் அசிஸ்டன்ட் பிஜாய் நம்பியார், ’சைத்தான்’ னு ஹிந்தில ஒரு சூப்பர் படம் கொடுத்தவருன்னு பார்த்து போனால் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
இரண்டே வரி கதை தான். ஒரு டேவிட் – விக்ரம் – இஷா ஷெர்வானி மேல இவருக்கு வர்ற காதல் நிறைவேறுதா ?
இரண்டாவது டேவிட் – ஜீவா – கிறிஸ்துவ பாதிரியாரான அப்பா நாசரை அவமானப்படுத்தற இந்து மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ, வை பழி வாங்கறாரா இல்லையா ?
இந்த இரண்டு டேவிட்டும் எப்படி இணையறாங்கன்னு பட ரிலீசுக்கு முன்னாடி ஒரு பெரிய பில்டப் கொடுத்துட்டு, கிளைமாக்ஸ்ல ரெண்டு பேரையும் இணைக்கிறாங்க பாருங்க…ப்ப்ப்ப்பா……அப்படியே ஆடிப் போயிடுவீங்க…
விக்ரம் படத்தில் எத்தனை காட்சிகளில் குடிக்காமல் , கையில் பாட்டில் இல்லாமல் வருகிறார் என ஒரு போட்டியே வைக்கலாம். ‘தேசிய விருது’ நடிகருக்கு இதெல்லாம் தேவையா ? ஒரு பொறுப்பு வேண்டாமா ? அப்படி என்ன இந்த கதாபாத்திரத்தில் இருக்கிறது. நடிச்சி, நடிச்சி தள்ளினா கூட பரவாயில்லை, குடிச்சி…குடிச்சி…தள்ளியிருக்காரு…
ஜீவா, அழகா இருக்கீங்க, நல்லா நடிக்கறீங்க…பெரிய ஆளா வருவீங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்…எப்படி ஸார், இப்படி போய் மாட்டிக்கறீங்க…முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், இப்ப ‘டேவிட்’….
விக்ரம் , ஒருதலையா காதலிக்கிற பெண்ணா இஷா இஷெர்வானி…காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி…அழகாய் இருக்கிறார்…அவ்வளவே….
மசாஜ் கிளப் நடத்தற பெண்ணா தபு…விக்ரமுக்கு அப்பப்ப காதல் அட்வைஸ் தர்றதோட அவர் வேலை முடிஞ்சிடுது.
ஜீவாக்கு….ஜோடியா (? !) ‘ஆன்ட்டி’ லாரா தத்தா…ஏன்…இந்த தகாத (?) காதல்…டைரக்டர் ஸார்…
நாசர்…ஜீவாக்கு அப்பா…தீவிர ஊழியம் செய்யும் ஒரு ஃபாதர். அவருக்கு ரெண்டு பெண்ணுங்க…இந்த குடும்பம் மட்டுமே நம்மள கொஞ்சம் உருக வைக்கிற குடும்பம்…அதுவும் தமிழ் ஃபேமிலிங்கறதால வருதோ என்னமோ….
விக்ரம் நண்பனா கே.பி. நிஷாந்த் , இந்து ஆதரவு கட்சி எம்.எல்ஏ. வா ரோஹிணி ஹட்டங்காடி, தாதாவா ஜான் விஜய்…மற்றும் பலர் வரிசையில்….
அனிருத் இசையில் , ஆடியோவில் ரசித்த பாடல்கள்…திரையில் பார்க்கும் போது, பரவாயில்லை ரகமாகவே தெரிகிறது.
எந்திரன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு , பி.எஸ். வினோத்…கோவா காட்சிகள் எழில் கொஞ்சுகின்றன…
‘டேவிட்’ – ஒரு பெயர் இரண்டு வலி…
