பக்ரீத் – விமர்சனம்

கதை

சாதாரண ஏழை விவசாயி விக்ராந்த், ஒரு முஸ்லிம் வீட்டிற்குக் கடன் கேட்கப் போய் அந்த வீட்டிற்கு வரும் ஒரு ஒட்டகக் குட்டியை வாங்கி வந்து வளர்க்கிறார். அது வளர்ந்த பின் அதன் உடல்நிலை  பாதிக்கப்படுகிறது. பரிசோதிக்கும் கால்நடை மருத்துவர், ஒட்டகம் அதன் சூழ்நிலைக்கேற்ப ராஜஸ்தானில்தான் வசிக்க வேண்டும் என்கிறார். அதனால், அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டு போய் விட்டுவிட கிளம்புகிறார் விக்ராந்த். ஆனால், அதற்கு பல தடைகள் வருகிறது. அவற்றை மீறி அவர் அதை அங்கு விட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

விக்ராந்த் இதற்கு முன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு தனியாகத் தெரிகிறது. ஏழை விவசாயி கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாய், இயல்பாய் நடித்திருக்கிறார். ஒட்டகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நெகிழவைக்கிறார். விக்ராந்த் மனைவியாக வசுந்தரா, மகளாக ஸ்ருதிகா இருவரும் கூட அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் வளர்க்கு ஆடு, மாடு போலவே ஒட்டகம் மீதும் பாசம் வைத்து மிருகங்கள் மீதான தமிழர்களின் பாசத்தை இந்தக் குடும்பம் புரிய வைக்கிறது. லாரி டிரைவர் ரோகித் பதக் கூட அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

இசை, மற்றவை

இமான் இசையில் ‘ஆலங்குருவிகளா…’ பாடல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது. பின்னணி இசையிலும் காட்சிகளின் உணர்வுகளை தன் இசை வழியே நமக்குக் கடத்துகிறார். இடைவேளைக்குப் பின் படத்தில் பயணக் காட்சிகள் அதிகம். நாமும் உடன் பயணிக்கும் உணர்வை ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் சுபு தருகிறார். அவரே படத்தின் இயக்குனர் என்பதால் அவர் நினைப்பதை காட்சிகள் வழியாக நமக்கும் தருகிறார்.

+

இதுவரை பார்க்காத ஒரு கதை…

இடைவேளைக்குப் பின் திரைக்கதையில் லேசான தடுமாற்றம்…

Read Previous

கென்னடி கிளப் – விமர்சனம்

Read Next

பக்ரீத் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

Most Popular