கதை
மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் ஆக, படிப்பில் திறமைசாலியாக இருக்கும் த்ருவ் விக்ரமிற்கு முதலாமாண்டில் சேரும் மாணவி பனிதா சாந்து மீது கண்டதும் காதல். மிகவும் கோபக்காரரான த்ருவ்வும், அமைதியான பனிதாவும் தீவிர காதலர்கள் ஆகிறார்கள். ஆனால், இந்தக் காதலுக்கு பனிதாவின் சாதி வெறி பிடித்த அப்பா சம்மதிக்க மறுக்கிறார். பனிதாவிற்கு உடனடியாக வேறு ஒருவருடன் திருமணத்தையும் செய்து வைக்கிறார். இதனால், தன் வீட்டை விட்டும் வெளியேறும் சூழல் த்ருவ்வுக்கு வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
அறிமுக நாயகன் த்ருவ் விக்ரம். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி, நம்பமுடியாதபடி அந்தக் கோபக்கார, தீவிர காதலனாக அப்படியே கதாபாத்திரத்திற்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார். விக்ரம் நடிப்பை பல படங்களில் பார்த்து பாராட்டிய ரசிகர்கள், அவரது மகன் த்ருவ்வின் முதல் பட நடிப்பிலேயே நிச்சயம் ரசிகர்களாகிவிடுவார்கள்.
சாந்த சொரூபியாக பனிதா சாந்து. ஆனால், முத்தம் கொடுப்பதிலும், படுக்கையைப் பகிர்வதிலும் காதலியாக இருப்பதைவிட காதலி தீயாக இருக்கிறார்.
நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நெருக்கமான, நெகிழ்ச்சியான கதாபாத்திரத்தில் அன்புதாசன். த்ருவ் அப்பாவாக கடலோரக் கவிதைகள் ராஜா, அண்ணான நடித்திருப்பவர், பாட்டி லீலா சாம்சன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
இசை, மற்றவை
ரதன் இசையில் படம் பார்க்கும் போது பாடல்கள் கதையோட்டத்துடன் அமைந்து ரசிக்க வைத்துள்ளன. பின்னணி இசையையும் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார்.
+
அறிமுகமாக இருந்தாலும் நாயகன், நாயகியின் நடிப்பு. சுவாரசியமான கல்லூரி காட்சிகள்.
–
முத்தக் காட்சிகள், சில ஆபாசக் காட்சிகள், படத்தின் நீளம்