சின்னத்திரை நடிகரான கௌசிக் இயக்குனராகவும், மற்றொரு சின்னத்திரை நடிகரான அஜய் நாயகனாகவும் அறிமுகமாகியுள்ள படம்.
கதைக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல் தமிழ் சினிமாவுக்கு அதிகம் பரிச்சயமான ‘சைக்கோ’வை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால், ‘சைக்கோ’த்தனமான கதையில் ஆரம்பம் முதலே ‘பேய்’ என உலவ விட்டு நம்மை இது ஒரு பேய்க் கதை என நம்ப வைப்பது சரியான ட்விஸ்ட். அந்த விதத்தில் இயக்குனராக கௌசிக் வென்றிருக்கிறார்.
அஜய், ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர். ஊட்டியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்கிறார். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அவரை ஏதோ ஒரு மர்ம பெண் உருவம் அடிக்கடி தொந்தரவு செய்கிறது. அந்த மருத்துவமனையில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக உணர்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குகிறார்.
அவருக்குத் துணையாக அந்த மருத்துவமனையைப் பற்றி டிவி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க வந்திருக்கும் கவிதா ஸ்ரீனிவாஸ் உதவுகிறார். ஆனால், இவர்களிருவரையும் மருத்துவமனையின் டீன் ஆட்கள் பின் தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அஜய்யை அவர்கள் மடக்கிப் பிடித்து மயக்க ஊசி போடுகிறார்கள்.
இதனால், அதிர்ச்சியடையும் கவிதா ஸ்ரீனிவாஸ், டீனை சந்தித்து அங்கு என்ன நடக்கிறது என்று காரணம் கேட்கிறார். இதன் பின் நடக்கும் சம்பவங்கள் ஒரு த்ரில்லர் படத்திற்கேயுரிய காட்சிகளால் விரிகின்றன.
இப்படி ஒரு படம் வந்தாலே எந்த இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டதோன்னு பேசறது வழக்கம். ஒரு சில நாள்ல, ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் வெளிப்படுத்திடுவாங்க.
‘சுட்ட கதை’யோ ‘சுடாத கதை’யோ கொஞ்சம் விறுவிறுப்பாவே ரசிக்க வைச்சிருக்காங்க. வழக்கமான த்ரில்லர் படங்கள்னா இப்படித்தான் இருக்கும்கற ஃபார்முலா மட்டும் அப்படியே இருக்கிறதுதான் குறை.
அஜய், ‘கோலங்கள்’ சீரியலின் வில்லன். இந்த படத்தில் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கரண். சீரியல்ல கூட கொஞ்சம் ஓவராவே நடிக்கிறவர்னு பேரு வாங்கினவரு. இந்த படத்துல அடக்கமா நடிச்சிருக்காரு. டாக்டர் கேரக்டரும் அவருக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு. எப்பவோ சினிமாவுக்குள்ள வந்திருக்கணும். டிவி தொடர்கள்ல நடிச்சி தப்புப் பண்ணிட்டாரோன்னு தோணுது.
இடைவேளைக்குப் பின்னர்தான் படத்தின் நாயகியான மித்தாலி அகர்வால் வர்றாங்க. அஜய்யைப் பார்த்ததும் காதல் என்பதெல்லாம் வழக்கமான சினிமாத்தனம். அதுவும் மாணவியாக இருக்கும் அவர் டாக்டர் பேராசிரியரைக் காதலிப்பதை, இன்றைய தலைமுறை இயக்குனர்களும் மாற்ற முயற்சிக்காமல் இருப்பது வருத்தமே.
டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரா எப்பவும் பரபரப்பா இருக்கிற கவிதா ஸ்ரீனிவாஸ். பெரிய முக்கியத்துவம் இல்லன்னாலும் கதை நகர்றதுக்கு உதவி பண்றாங்க.
மருத்துவமனை டீனா ராமநாதன், ‘கஜினி’ படத்துல சூர்யாவுக்கு டாக்டரா இருப்பாரே , அவரேதான். பார்த்துங்க சார், தொடர்ந்து டாக்டராவே நடிக்க வச்சிடப் போறாங்க.
எல்.வி. கணேசன் இசையில் பின்னணி இசை மிரள வைக்கிறது. அதற்காக அடிக்கடி ‘அடியோ அடி’ன்னு அடிச்சதையெல்லாம் தவிர்த்து நிறைய சைலன்ட் ஷாட்ஸ் விட்டிருக்கலாம். இப்படிப்பட்ட படங்களுக்கு பாடல்கள் தேவையே இல்லை.
வாசன் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளிலும் ஒரு தெளிவைத் தருகிறது. ஏரிக்கு முன்னாடி காதலர்கள் அமர்ந்திருக்கும் ஒரு காட்சி அழகான ஒளி ஓவியம்.
ஒரே மருத்துவமனை மட்டுமே கதைக் களமாக வருவது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. நான்கைந்து கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமாக இடம் பெறுவது பெரிய திரையில் படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தராமல் பெரிய திரையில் ஒரு சின்னத் திரை என்ற உணர்வையே தருகிறது.
கிளைமாக்சில் – மீண்டும் முதல்ல இருந்தே ஆரம்பிக்கும்…காட்சி அருமை…
ஆதியும் அந்தமும் – அனுபவப் பாடம்…