ஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்

aadhalaal-kadhal-seiveer தயாரிப்பு – நல்லு ஸ்டுடியோஸ் – தாய் சரவணன் வெளியீடு – ரெட் ஜெயன்ட் மூவீஸ் – உதயநிதி ஸ்டாலின் இயக்கம் – சுசீந்திரன் இசை – யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் – வாலி, நா. முத்துக்குமார், யுகபாரதி ஒளிப்பதிவு – சூர்யா. ஏ.ஆர். படத்தொகுப்பு – ஆண்டனி சண்டைப் பயிற்சி – அனல் அரசு நடனம் – ஷோபி கலை – எஸ். ஜெயச்சந்திரன் மக்கள் தொடர்பு – நிகில் நடிப்பு – சந்தோஷ் (அறிமுகம்), மனிஷா, ராம்நாத், பூர்ணிமா பாக்யராஜ், ஜெயபிரகாஷ், துளசி, தருண் மாஸ்டர் மற்றும் பலர்… வெளியான தேதி – 15 ஆகஸ்ட் 2013.  

பாலா இயக்கிய ‘சேது’ படத்தை முதன் முதலாக தியேட்டரில் பார்க்கும் போது…“எங்கே செல்லும் இந்த பாதை…’ பாடல் ஏற்படுத்திய வலி,ஏறக்குறைய 14 ஆண்டுகள் கழித்து இந்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிளைமாக்சில் இடம் பெற்றுள்ள , “ஆராரிரோ….” தாலாட்டுப் பாடலை கேட்கும் போது ஏற்பட்டது.

படம் முடிந்தும் சீட்டை விட்டு எழுந்து வெளியே வர கொஞ்ச நேரம் ஆயிற்று. அந்த அளவிற்கு உணர்வு பூர்வமாக நம்மை ஒரு 2 மணி நேரம் கட்டிப்  போட்டு விட்டார் இயக்குனர் சுசீந்திரன்.

‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்ற பேர் சொல்லும் படங்களின் பாதையில் பயணியுங்கள் சுசீந்திரன். ‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’ பாதை உங்களுக்கு எதற்கு…

இயக்குனர் மகேந்திரன் படங்களை இயக்கி பல வருடங்கள் ஆனாலும், இன்றும் அவர் படங்களை மட்டுமே சிறந்த, நல்ல படங்களுக்கு உதாரணமாகச் சொல்லிக் கொண்டு வருகிறோம். உங்களின் படங்களும் இந்த வரிசையில் இடம் பெறவேண்டும்.

கமர்ஷியல் சினிமா மாயையில் நீங்களும் சிக்கி விடாதீர்கள். இப்படி வித்தியாசமாக யோசிக்கும் சில இயக்குனர்களை ஒரு திரைப்பட ரசிகனாய் , ஹீரோயிசத்திற்குப் பின் நாங்கள் இழக்கத் தயாரில்லை. ‘சேர, சோழ, பாண்டிய நாடு’ என எந்த நாட்டுக்குப் பின் போனாலும் நம் மண்ணின் வாசத்தை விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.

ஒரு இயக்குனரின் வெற்றி அவர் எப்படிப்பட்ட கதைக்களத்திலும் புகுந்து விளையாடுவதில்தான் இருக்கிறது. ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ இரண்டும் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகள். ‘நான் மகான் அல்ல’  படமும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படமும் நகரத்துப் பின்னணி கொண்ட கதைகள்.

எப்படிப்பட்ட கதைக்களமாக இருந்தாலும் அதிலுள்ள உயிரையும், யதார்த்தத்தையும் திரையில் நீங்கள் வெளிப்படுத்தும் விதம் மிக அருமை.

இந்த படத்தின் நாயகன் சந்தோஷதையும் யதார்த்தம் கருதியே நீங்கள் அறிமுகப்படுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறோம். காதலித்து ஒரு பெண்ணை ஏமாற்றும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என கடைசியில் யோசிக்க வைத்து வீட்டீர்கள். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஹீரோ சந்தோஷ் மீது நமக்கு வரும் வெறுப்பு அவர் நடிப்புக்கு கிடைக்கும் பாஸ் மார்க்.

‘வழக்கு எண் 18/9’ படத்தில் பள்ளி மாணவியாக இருந்த மனீஷாவுக்கு இந்த படத்தில் கல்லூரி மாணவியாக பிரமோஷன். நடிப்பிலும் பிரமோஷன் வாங்கியிருக்கிறார். ஆண்கள் எப்படியெல்லாம் காதல் வசனம் பேசி ஏமாற்றுவார்கள் என்று தோழி சொன்ன பின்னும், காதல் மயக்கத்தில் ஒரு பெண் ஏமாறுவதை யதாரத்தமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் பெற்றோர்களாக ராம்நாத், பூர்ணிமா பாக்யராஜ்…பூர்ணிமாவிற்கு முக்கியத்துவமே இல்லை. ஆனால், மனீஷாவின் அம்மாவாக வரும் துளசி, மகள் வாந்தி எடுப்பதைப் பார்த்து பதறும் அந்த ஒரு காட்சியிலேயே நடுத்தர அம்மாக்களின் பரிதவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனீஷாவின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ்..வழக்கம் போல் நேர்த்தியான நடிப்பு.

கிளைமாக்ஸ் நெருங்க ஆங்காங்கே சில வழக்கமான சினிமாத்தனங்கள் தெரிந்தாலும் , பின்னர் அவை மறக்க வைக்கப்படுகின்றன.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு நன்றாக உயிர் கொடுத்திருக்கிறது. ‘மெல்ல சிரித்தாள்…’ மெலடியும், கிளைமாக்ஸ் பாடலும் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும் ரகம்.

சூர்யா.ஏ.ஆர்-ன் ஒளிப்பதிவு சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறது. ஆனால், சில க்ளோஸ் அப் காட்சிகளை வலுக்காட்டாயமாகத் தவிர்த்திருக்கலாம்.

படத்தில் மிகச் சிறந்த நடிகர் யார் என்று கேட்டீர்கள் என்றால், கிளைமாக்ஸ் பாடலில் வரும் அந்த இரண்டு வயது சிறுவன்தான்…அவன் சிரிப்பும், செய்கையும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண் எதிரில் காட்சியாக விரிகிறது.

ஆதலால், படத்தைப் பார்ப்பீர்…

Read Previous

ராதிகா குழுவுக்கு ஒத்துழைப்பு இல்லை – ஃபெப்ஸி அறிவிப்பு

Read Next

‘தலைவா’ குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு…

Most Popular