‘தலைவா’ குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு…

thalaiva location_00004

‘தலைவா’ பட வெளியீட்டின் தாமதத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ‘தலைவா’ குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ், காவல்துறை ஆணையருக்கு , உண்ணாவிரம் இருக்க அனுமதி வழங்குமாறு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம் பின் வருமாறு,

“’தலைவா’ திரைப்படம் கடந்த ஆக.9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் ‘தலைவா’ திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.

தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் ‘தலைவா’ படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் , இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

ஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்

Read Next

தில்லாக ‘புகை பிடிக்கும்’ நாயகி…