ஒரு விஷயத்தை சீரியசாவும் சொல்ல முடியும், நகைச்சுவையாவும் சொல்ல முடியும், ஆனால் சீரியசான ஒரு விஷயத்தை நகைச்சுவையா சொல்றது சாதாரண விஷயமில்லை. என்ன சொல்ல வர்றோம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறோம். ஊழல் புகாத இடமே உலகத்துல இல்லங்கறது ஆகிடுச்சி. அதுலயும் நம்ம நாட்டுல இருக்கிற பல கோடி பேரு பார்த்து ரசிக்கிற கிரிக்கெட்டுல ஊழல் புகுந்ததுதான் அந்த விளையாட்டை உண்மையா நேசிக்கிற எல்லாருக்குமே அதிர்ச்சியா இருந்துச்சி. ‘கேம்ப்ளிங்’, அதாவது சூதாட்டம் மூலமா கிரிக்கெட்டுல கோடி கோடியா பணம் சம்பாதிக்கிற ஒரு சீரியசான ஊழல் விஷயத்தைப் பத்தி நகைச்சுவையா ஒரு படத்தை எடுத்து ரசிக்க வச்சிருக்காங்க. கிரிக்கெட்டுல ஆடினால்தான் வீரர்கள் பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் கிரிக்கெட் ஆடாம, ஆடறவங்களை வச்சி, சூதாட்டம் மட்டுமே ஆடி பணம் சம்பாதிக்கிற ஒரு கதையைக் கொடுத்து இந்த ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்துல அட்டகாசமாக ஜெயிச்சிருக்காங்க. இயக்குனர் பத்ரி இதற்கு முன் எடுத்த படங்கள்லலாம் நகைச்சுவை ஒரு பார்ட்டாதான் இருந்திருக்கு, ஆனால் இந்தப் படத்துல எல்லா பார்ட்டுலயும் நகைச்சுவைதான் கலந்திருக்கு. படத்துக்கு டயலாக் ‘மிர்ச்சி சிவா’வாம். அட, இவர் பேசறதே தாங்காதே, இதுல டயலாக் வேறயான்னு கேக்கறவங்களுக்கு, ஸோ…சாரி…நகைச்சுவை டைமிங் பிளஸ் ரைமிங்ல அடிச்சி பிடிச்சி அசத்தியிருக்காரு மிர்ச்சி சிவா. கருணாகரன் ஒரு கால் டாக்சி டிரைவர், தள்ளு வண்டில ஹோட்டல் வியாபாரம் நடத்திட்டிருக்கிற விஜயலட்சுமியைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கிறாரு. ஆனா, கல்யாணத்துக்கப்புறம் கருணாகரனுக்கு இருக்கிற கடனைனப் பார்த்து கோவிச்சிக்கிட்டு போயிடறாங்க. பாலாஜி ஒரு கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர், நடக்கப் போற ஒரு மேட்ச்சுல ஒரு கிரிக்கெட் வீரரை ‘பிக்சிங்’ பண்ண வைக்க ஒரு சிலரோட சேர்ந்து முயற்சில இறங்கிறாரு. அந்த விஷயம் கருணாகரனோட டாக்சில பாலாஜி போகும் போது கருணாகரனுக்குத் தெரிய வருது. இந்த சூதாட்டத் திட்டத்தை முறியடிக்க குற்றம் செய்யறவங்களைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டரான பாபி சிம்ஹா நியமிக்கப்படறாரு. ஆனால், ஹோட்டல்ல தங்கியிருக்கிற பாலாஜியை யாரோ கொலை பண்ணிடறாங்க, அந்தக் கொலையை கருணாகரன் செஞ்சிருக்கலாம்னு சிம்ஹா அவரைக் கைது பண்றாரு. அதுக்கப்புறம் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிச்சாங்களா, சூதாட்டக் கும்பலை கைது செஞ்சாங்களான்றதுதான் படத்தோட பரபரப்பான மீதி கதை. கதைக்குப் பொருத்தமான டைட்டிலா, இல்லை டைட்டிலுக்குப் பொருத்தமான கதையான்னு மட்டும் சொல்லாம படத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் ‘ஆடாம’ நடிச்சி பெயர் வாங்கலை, அற்புதமா நடிச்சி பெயர் வாங்கியிருக்காங்க. கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற கருணாகரனாகட்டும், எதையும் தப்புத் தப்பாவே பண்ற பாபி சிம்ஹாவாகட்டும், அவர் மேல அசாத்திய நம்பிக்கை வச்சிருக்கிற போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாராகட்டும், தாலி கட்டுன புருஷனை விட போற வீட்டுல பாத்ரூம் இருக்கான்னு கேக்கற விஜயலட்சுமியாகட்டும், பணத்தைப் பறிகொடுத்துட்டு பதறிட்டிருக்கிற நரேனாகட்டும், சமயத்துக்கேத்த படி சாஞ்சிக்கிற சேத்தனாகட்டும், இப்படி ஒவ்வொருத்தருமே ஒரே பால்ல சிக்சர் மேல சிக்சர் அடிச்சிருக்காங்க. பரபரப்பான திரைக்கதை, எந்த டயலாக்குக்கு எப்ப சிரிச்சோம்கறதே தெரியாத அளவுக்கு தொடர்ந்து சிரிக்க வைக்கிற டயலாக், பொருத்தமான நட்சத்திரத் தேர்வு எல்லாமே படத்துக்கு பக்கபலமாக அமைஞ்சிருக்கு. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மட்டும் இதுவரைக்கும் பார்த்துட்டு வர்ற படங்கள்ல பாடல்கள்ல தனி கவனம் செலுத்தவே மாட்டேங்கறாரு. இந்த வருஷம் ரிலீஸ் ஆகற படங்களோட எண்ணிக்கை 200 படங்களுக்கு மேல இருக்கப் போகுது, அதுல கண்டிப்பா ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படமும் குறிப்பிடற மாதிரியான ஒரு படமா அமையும்கறதுல சந்தேகமேயில்லை…