ஆடை – விமர்சனம்

கதை

டிவி ஒன்றில் அப்பாவி மக்களை ஏமாற்றும் ‘பிரான்க்’  நிகழ்ச்சி ஒன்றை நடத்துபவர் அமலா பால். பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைப்பவர். அவரை அடக்கி ஆள்வது அவருக்குப் பிடிக்காது. ‘பெட்’ கட்டி எதையும் துணிச்சலாகச் செய்யும் குணம் கொண்டவர். அவருடைய பிறந்த நாளன்று உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் ஆடை இல்லாமல் தனியாக, காலி செய்யப்பட்ட அவர்களது அலுவலகக் கட்டிடத்தில் இருக்கிறேன் என சவால் விடுகிறார். குடி போதையில் அதையும் செய்கிறார். விடிந்து பார்த்தால் உடன் குடித்த நண்பர்கள் யாரும் இல்லை. அவர் மட்டும் தனியாக அந்த அலுவலகத்தினுள் இருக்கிறார். யாரையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு எப்படி வெளியில் வந்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

படம் முழுவதுமே அமலா பாலைச் சுற்றியே நகர்கிறது. அதற்கேற்றபடி காமினி கதாபாத்திரத்தில் பெமினிஸசம் பேசும் பெண்ணாக அசால்ட்டாக நடித்திருக்கிறார் அமலா பால். தமிழ் சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட ஒரு மணி நேரத்திற்கு ஆடையில்லாமல் ஒரு நாயகி இதற்கு முன் நடித்திருக்கிறாரா என்பது சந்தேகம்தான். ஒரு காட்சியில் கூட ஆடையில்லாத அந்த தோற்றம் ஆபாசமாகக் காட்டப்படவில்லை. அமலா பால் தவிர விவேக் பிரசன்னா, ரம்யா, அமலா பாலைக் காதலிப்பதாகச் சொல்லும் அந்த நபர் கவனம் பெறுகிறார்கள்.

இசை, மற்றவை

பிரதீப்குமார், ஊறுகா பின்னணி இசை காட்சிகளுக்குத் தக்கபடி உள்ளன. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் உழைப்பு பாராட்டுக்குரியது. ஒரு மணி நேரத்திற்கு ஆடையில்லாத அமலா பாலை எந்தக் கோணத்திலும் ஆபாசமாக இருக்கும்படி காட்டக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.

 

இதுவரை பார்த்திருக்காத புது கதை. டிவி, யு டியூப்களில் மற்றவர்களை கிண்டல், கேலி செய்து ‘பிரான்க்’ ஷோவால் ஏற்படும் பாதிப்புகளை மிகச் சரியாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தில் உள்ள வசனங்கள் பல இடங்களில் கைத்தட்டலைப் பெறுகின்றன.

 

இடைவேளைக்குப் பின் அமலா பால் அந்த காலியான பில்டிங்கில் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகளின் நீளம் அதிகமாக உள்ளது. கிளைமாக்சில் திடீரென ஒரு புது கதாபாத்திரத்தை நுழைத்து அட்வைஸ் செய்திருப்பது சற்றே இடிக்கிறது. ஆனால், அந்த அட்வைஸ் முழுவதும் தேவையான ஒன்று என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Read Previous

6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்

Read Next

கடாரம்கொண்டான் – விமர்சனம்