கதை
விக்ரம் மலேசியாவில் ஒரு டபுள் ஏஜன்ட் ஆக இருக்கிறார். காவல்துறையிலும் வேலையில் இருந்தவர். ஒரு நாள் இரவில் விபத்தில் சிக்கி நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். யார் என்று தெரியாத அவருக்கு போலீஸ் காவல் வைக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் அபிஹாசனின் மனைவி அக்ஷராவை கடத்தி வைத்துக் கொண்ட அபியிடம், விக்ரமை மருத்துவமனையை விட்டு வெளியில் அழைத்து வரச் சொல்கிறார்கள். அதன்படி போலீசை ஏமாற்றி விக்ரமை வெளியில் அழைத்து வருகிறார் அபிஹாசன். அதன் பின் நடக்கும் தொடர் மர்மமான சம்பவங்கள், மனைவி அக்ஷராவை அபி மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
நரைத்த தலை முடி, தாடி என வித்தியாசமான தோற்றத்தில் கேகே என அழைக்கப்படும் விக்ரம். அவர் யார் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளவே நமக்குக் கொஞ்ச நேரம் ஆகிறது. ஆனாலும், வழக்கம் போல் விக்ரம் அவருடைய கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். சின்னச் சின்ன நுணுக்கங்களிலும் கவர்கிறார். வசனங்களை விட பார்வையாலேயே பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
அறிமுக நாயகன் அபிஹாசன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பிலும் யதார்த்தம் தெரிகிறது. அக்ஷரா ஹாசன் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார். படம் முழுவதுமே வயிற்றிலேயே கை வைத்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் காதல், அதிக பயம் என சில காட்சிகளே வருகிறார்.
இசை, மற்றவை
ஜிப்ரான் பின்னணி இசை, ஸ்ரீனிவாஸ் படத் தொகுப்பு இரண்டுமே வேற லெவல். பார்க்க ஹாலிவுட் சினிமா போல இருக்க வேண்டும் என நினைத்து உழைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
படத்தின் மேக்கிங் சிறப்பு. மலேசியாதான் படத்தின் முழு கதைக்களம். சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், அதிகாரப் பகிர்வில் நடக்கும் சண்டை என பார்த்திருக்காத கதைக்களம்.
விக்ரமிற்கு இன்னும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். கதை சொல்லலில் குழப்பம் இருக்கிறது. விக்ரம் கதாபாத்திரம் யார் என்பதை போலீசார் விசாரிக்கும் போதே இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். படம் முடிந்த பின்னும் எதையோ சொல்லாமல் விட்டுவிட்டார்களோ என்றே யோசிக்க வைக்கிறது.