விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ கதையில் நடந்தது என்ன என்பது தெரிய வந்துள்ளது.
வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ‘கொரோனா குமார்’. சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்பு சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி என்று பேசப்பட்டு கைவிடப்பட்டது. பின்பு ‘கொரோனா குமார்’ படம் குறித்த எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.
இதனிடையே, தற்போது விஷ்ணு விஷால் – கோகுல் இணையும் படம் ‘கொரோனா குமார்’ கதை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, புதிய தகவலொன்று கிடைத்தது.
என்னவென்றால், ‘கொரோனா குமார்’ கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்து தலைப்பையும் மாற்றியிருக்கிறார் கோகுல். தற்போது கொரோனா என்பது பழைய விஷயமாகிவிட்டதால், கதையில் அந்த விஷயத்தையே தூக்கிவிட்டார். மேலும், விஷ்ணு விஷாலுக்கு ஏற்றவகையிலும் மாற்றியிருக்கிறார்.
இதனால் ‘கொரோனா குமார்’ கதைக்கும் விஷ்ணு விஷால் படத்துக்கும் சம்பந்தமே இருக்காது என்கிறார்கள். அந்த தலைப்பிலும் படம் உருவாகாது என்று தெரிவித்தார்கள்.