தொடர்ச்சியாக தமிழக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் விஜய்யின் அரசியல் வருகை எப்போது என்பது முடிவாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருடைய சமீபத்திய படங்கள் யாவுமே உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. மேலும், விஜய்யின் அடுத்த கால்ஷீட் யாருக்கு என்ற பேச்சும் முன்னணி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்பா – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய்.
‘GOAT’ படத்துக்குப் பிறகு விஜய்யின் அரசியல் வருகை உறுதி, 3 ஆண்டுகள் சினிமாவுக்கு முழுக்கு என்றெல்லாம் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதில் எதுவுமே உண்மையில்லை.
அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அரசியல் வருகை என்பது இல்லை.
விஜய்யின் கவனம் அனைத்துமே, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்தே இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மேலும், இதற்காக தனியாக பல்வேறு நபர்களை பணியில் அமர்த்தியுள்ளார் விஜய். இவர்களுடைய திட்டங்கள்படியே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் விஜய்.
2025-ம் ஆண்டு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்யுங்கள் என்று விஜய்யிடம் கூறியிருக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஆனால், அது அனைத்து தலைவர்களும் செய்வது, நாமும் அவ்வாறு செய்வது சரியாக இருக்குமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் விஜய்.