‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் நடிகர் விதார்த்.
தற்போது ‘ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை’ என ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து அவர் நடிக்கும் 25வது படத்தை பென்ச் மார்க் பிலிம்ஸ் சார்பாக ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சீனிவாசன் இப்படத்தை இயக்குகிறார்.
புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படம், ஆறு பகல் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வரவேண்டும் என்கின்ற தவிப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது.
மற்ற அனைத்தும் சென்னையில் படமாக்கப்பட்டது. படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூணர் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.