‘வணங்கான்’ படக்குழுவில் திடீர் மாற்றம்

‘வணங்கான்’ படத்தின் இசைப் பொறுப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் சூர்யாவை வைத்து படமாக்கி, பின்பு கருத்து வேறுபாடால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருண் விஜய் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அனைத்துமே முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகஸ்ட் மாதத்தில் படத்தினை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது படக்குழு.

முதலில் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வந்தார். ஆனால், ஆகஸ்ட் வெளியீடு என்று முடிவாகிவிட்டதால், இதன் பின்னணி இசைக் கோர்ப்பு பணியிலிருந்து விலகிவிட்டார். ஏனென்றால் ‘தங்கலான்’ மற்றும் ‘வணங்கான்’ என்ற இரண்டு படங்களும் ஆகஸ்ட் வெளியீடு என்றால் பணிபுரிவது கடினமாக இருக்கும் என்பதே காரணம்.

ஆகையால், தற்போது பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை மட்டும் சாம் சி.எஸ் செய்து வருகிறார். இதன் பணிகள் விரைவில் முடியவுள்ளது. படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார்.

‘தங்கலான்’ மற்றும் ‘வணங்கான்’ ஆகிய படங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read Previous

தனுஷுக்கு நாயகியாக ‘அனிமல்’ நாயகி ஒப்பந்தம்

Read Next

ஜெயம் ரவியை இயக்கும் ‘டாடா’ இயக்குநர்?