பெரியாரை அவமதிக்கும் படம் இல்லை ‘வடக்குபட்டி ராமசாமி’, இயக்குனர் விளக்கம்

கார்த்திக் யோகி இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சந்தானம், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வடக்குபட்டி ராமசாமி’.

இப்படத்தின் டிரைலர் பொங்கலுக்கு முன்பு வெளியானது. அதில் இடம் பெற்ற வசனம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. “ஏன்டா டேய், இந்த சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே, அந்த ராமசாமி நீதான நீ,” என ஒருவர் சந்தானத்திடம் கேட்க, அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்ல,” என பேசும் வசனம் பெரியாரை அவமதிப்பதாக உள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.

பொங்கல் தினத்தன்று, சந்தானம் டிவிட்டரில் அந்த வசனத்தை பின்னணியில் சேர்த்து பொங்கல் கொண்டாடும் வீடியோவைப் பதிவிட்டார். அதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், சந்தானம் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களை படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “படத்தில் இடம் பெற்ற அந்த வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும் வசனமல்ல. காட்சிக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வசனம்தான் அது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்குரிய விளக்கத்தை சந்தானம் கண்டிப்பாகக் கொடுப்பார்.

பக்தியை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 70களில் நடக்கும் கதை. அப்போது ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவியது. அதை வைத்தும் படத்தின் திருப்புமுனை காட்சிகளை அமைத்துள்ளோம். ஒரே கட்டமாக 63 நாட்களில் படத்தை முடித்தோம்.

எனது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ படம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு படமாக அமைந்தது. அதனால், அடுத்த படத்தை கடந்த காலத்தைப் பற்றிய ஒரு படமாக எடுக்க வேண்டும் என இப்படத்தை எடுத்துள்ளேன்.

எனது இரண்டு படங்களின் தலைப்பும் கவுண்டமணி அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தலைப்புகள்தான். இந்தப் படம் கலகலப்பான ஒரு படமாக இருக்கும்,” என்றார்.

Read Previous

‘மகாராஜா’ படத்திற்கு ஏற்பட்டுள்ள புதுவித சிக்கல்

Read Next

பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான கதை தான் “சிக்லெட்ஸ்” – கே ராஜன்