‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடப்பாவில் சுமார் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
முதலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இந்தப் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு கடப்பாவில் தொடங்கி இருக்கிறது. இதற்காக தான் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 29) பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இது படத்தின் முக்கியமான காட்சிகள் என்பதால் எந்தவொரு காரணம் கொண்டும், படப்பிடிப்பு புகைப்படம் வெளியே சென்றுவிடக் கூடாது என்று கூடுதல் கவனம் மேற்கொண்டுள்ளது படக்குழு.
’வேட்டையன்’ படத்தினை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினிகாந்த்.