‘தக் லைப்’ படப்பிடிப்பு எப்போது என்பதை கமல் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘தக் லைப்’. இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தமான துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவருமே தேதிகள் பிரச்சினையால் விலகிவிட்டார்கள். தற்போது அவர்களுக்கு பதில் யார் நடிக்கவுள்ளனர் என்பதை படக்குழுவினர் இன்னும் முடிவு செய்யவில்லை.
இதனிடையே, ‘தக் லைப்’ படப்பிடிப்பு எப்போது என்பதும் தெரியாமலேயே இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் செர்பியா சென்ற படக்குழு, கமல் இணையாத காரணத்தினால் சென்னை திரும்பிவிட்டது. இதனால் இந்தப் படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அனைத்தும் பதிலளிக்கும் விதமாக கமல் அளித்துள்ள பேட்டியொன்றில் “’இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ ஆகிய படங்களை முடித்துவிட்டேன். இதில் ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே முதலில் வெளியாகும். அதற்குப் பின் ‘இந்தியன் 3’ பணிகள் தொடங்கும்.
‘கல்கி’ படத்தில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். இவற்றைத் தொடர்ந்து ‘தக் லைப்’ படத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு தேர்தல் பணிகள் முடிந்தவுடன் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ‘தக் லைப்’ படத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.