’ஜீனி’ படத்தின் உரிமைகள் பெரும் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
‘சைரன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘ஜீனி’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தினை மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்கி வருகிறார். இதில் க்ரீத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிக்யா காபி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (மார்ச் 24) வெளியிடப்பட்டது. இன்னும் டீஸர், பாடல் உள்ளிட்ட எதையுமே படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனிடையே, ‘ஜீனி’ படத்தின் ஒட்டுமொத்த தொலைக்காட்சி, ஓடிடி மற்றும் இந்தி டப்பிங் உரிமை ஆகியவற்றை பி4யூ நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறது.
இந்த விற்பனையிலேயே படத்தின் பட்ஜெட்டில் சுமார் 80% வரை பெற்றுவிட்டது வேல்ஸ் நிறுவனம். இன்னும் திரையரங்க உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை மட்டுமே பாக்கியிருக்கிறது. இவற்றையும் விற்றால் படம் வெளியீட்டின் போதே, தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த அளவுக்கு விற்பனையாகி இருப்பதால், ‘ஜீனி’ படத்தினை பெரியளவில் விளம்பரம் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.