சூர்யாவுடன் இணைந்து நடிப்பதற்கு யாரிடமும் கதையில்லை என்று ஜோதிகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
சூர்யா – ஜோதிகா இருவருமே தங்களது குழந்தைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டனர். படப்பிடிப்புக்காக மட்டுமே சூர்யா சென்னை வந்துச் செல்கிறார். அவ்வாறு வரும் போது மட்டும், சென்னையில் உள்ள வீட்டில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்.
சரியான கதை அமைந்தால் மட்டுமே நடிக்கிறார் ஜோதிகா. மீதி நேரம் முழுக்க குழந்தைகளுடன் தான் செலவு செய்கிறார். சமீபத்தில் அஜய் தேவ்கான், மாதவன் உடன் இணைந்து ‘சைத்தான்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
’சைத்தான்’ வெற்றிக்குப் பிறகு ஜோதிகா அளித்து பேட்டியில், கணவர் சூர்யாவுடன் ஏன் இணைந்து நடிப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:
“நாங்கள் நல்ல கதையை எதிர்பார்க்கிறோம். எங்களுக்காக யாரிடமும் கதை இல்லை. இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். யாருமே எங்களுக்காக கதையை சொல்லி, நாங்கள் வேண்டாம் என்று சொன்னதில்லை.
எங்களைத் திரையில் பார்ப்பதை விட நிஜத்தில் பார்ப்பதை தான் அனைவரும் விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். இருவருமே இணைந்து வழக்கமான கதையில் நடிப்பதை விரும்பவில்லை. யாரேனும் புதுமையான களத்தில் எங்களை காண்பதற்கு இருவருமே காத்திருக்கிறோம்”
இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.