தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒரு புதிய சுவை சேர்க்கும் வகையில் வெளியாகியிருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ஊரக பஞ்சாயத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மனித உறவுகள், பகைமைகள் மற்றும் சமரசங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் ஒரு அழகான கதை.

ஜீவா தலைமையிலான நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பும், மலையாளத் திரைப்பட பாணியிலான இயக்கமும் இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக மாற்றியிருக்கிறது.

ஊரின் பஞ்சாயத்து தலைவராக ஜீவா, வாக்குகளுக்காக மட்டுமல்ல, உண்மையான அக்கறையுடன் மக்களின் வீட்டு விசேஷங்கள், திருமணங்கள், துக்க நிகழ்வுகள் என அனைத்தையும் தலைமை ஏற்று நடத்தும் ஒரு உதாரண கதாபாத்திரம். அப்படியொரு சூழலில், இளவரசுவின் மகள் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது, அருகிலுள்ள தம்பி ராமையாவின் தந்தை திடீரென இறந்துவிடுகிறார். இந்த இரு குடும்பங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கும் பகைமை, விஷயத்தை சிக்கலாக்குகிறது.

தம்பி ராமையா, தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை இளவரசுவின் மகள் திருமணத்துடன் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அதே சமயம், இளவரசு தனது வீட்டில் திருமணத்தை எந்த வித இடையூறுமின்றி நடத்த விரும்புகிறார். இந்த இரு தரப்புகளையும் சமாதானம் செய்து, இரு நிகழ்வுகளையும் சீராக நடத்தும் பொறுப்பு ஜீவாவின் தோளில் விழுகிறது. இந்த பஞ்சாயத்து சவாலில் ஜீவா வெற்றி பெற்றாரா ? என்பதை நகைச்சுவை கலந்து, சிந்தனையைத் தூண்டும் வகையில் சொல்வதே ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் சாராம்சம்.

ஜீவாவின் நடிப்பு இந்தப் படத்தின் உயிர்நாடி. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் அன்பாகப் பழகும், கலகலப்பான ஆனால் பொறுப்புமிக்க கதாபாத்திரத்தில் அவர் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். இயல்பான அவரது நடிப்பு, முழுப் படத்தையும் தனி ஆளாகத் தாங்கியிருக்கிறது. ஜீவாவைத் தவிர்த்து, மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் திரைக்கதையில் முக்கிய இடம் பிடித்து, பார்வையாளர்களை சிரிக்க வைக்கின்றன. ஆனால், அவர்களை எல்லாம் தலைமை தாங்கி வழிநடத்தும் தலைவராக ஜீவா தனது முத்திரையைப் பதித்துவிடுகிறார்.

‘பார்க்கிங்’ படத்தில் கவனம் ஈர்த்த பிராத்தனா நாதன், இங்கு மணமகள் வேடத்தில் எளிய அழகும், அளவான நடிப்பும் கொண்டு இதயங்களைக் கவர்கிறார். கதையின் மையத்தில் பயணிக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா, தங்கள் இயல்பான நடிப்பால் திரைக்கதையின் சுவாரசியத்தை உயர்த்தியிருக்கின்றனர்.

ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி போன்றோர் படம் முழுவதும் நகைச்சுவை தூவி, சிரிப்பலைகளை உருவாக்குகின்றனர்.

ஒளிப்பதிவாளர் பப்ளு அஜு, படத்தை வண்ணமயமாகக் காட்சிப்படுத்தி, மலையாளத் திரைப்பட உணர்வைத் தருகிறார். இசையமைப்பாளர் விஷ்ணு விஜய், பாடல்களை கொண்டாட்டமாகவும், பின்னணி இசையை காட்சிகளுக்கு வலுவூட்டும் வகையிலும் அமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு, ஒரே இடத்தில் நடக்கும் கதையை வேகமாக நகர்த்தி, சலிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறார். இயக்குநரின் கருத்தை நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார்.

சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ், அனுராஜ் ஓ.பி ஆகியோரின் திரைக்கதை, எளிய கதைக்கருவுக்கு பெரும் வலிமை சேர்க்கிறது. நகைச்சுவை நிறைந்திருந்தாலும், சில சமூக விஷயங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ், வாழ்வியல் சம்பவங்களை நகைச்சுவையுடன் கலந்து, மலையாளப் பாணியில் கையாண்டிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவம். ஒட்டுமொத்தமாக, சிரிப்பும் சிந்தனையும் கலந்த ஒரு குடும்ப பொழுதுபோக்கு படம்.

Read Previous

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

Read Next

தனுஷ் நடிக்கும் ‘கர’, கோடை விடுமுறையில் வெளியீடு

Most Popular