விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் பத்து நாட்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.
இருந்தாலும் ஆரம்ப வாரங்களில் நடந்த நிகழ்வுகளை நமது டிவி நேயர்கள் இன்னும் மறப்பது போல் தெரியவில்லை.
நிகழ்ச்சி ஆரம்பமான இரண்டு வாரங்களுக்குள்ளேயே பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா ஸ்டார் அந்தஸ்துக்கும் மேலாக மக்களிடத்தில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து சில வாரங்கள் ஓவியாவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால், திடீரென ஓவியா நிகழ்ச்சியை விட்டு அவராக விலகினார்.
அவர் விலகுவதற்கு ஆரவ், காயத்ரி, சக்தி, ஜுலி ஆகியோர் காரணமாக இருந்தார்கள். ஓவியாவை நிகழ்ச்சியில் பல விதங்களில் அவர்கள் வெறுப்பேற்றினார்கள், ஓவியாவைப் பற்றி கடுமையாகப் பேசினார்கள். சண்டை, சச்சரவுகளும் நடந்தன. ஆரவ்வைத் தவிர மற்றவர்கள் நிகழ்ச்சியை விட்டு ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்கள்.
வெளியில் வந்ததும் காயத்ரி, அவருடைய டிவிட்டர் கணக்கில் தொடர்ந்து ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு பதிவிலும் பலர் கடுமையான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வந்தனர். சிலர் வரம்பு மீறி அசிங்கமாகவும் பதிவிட்டனர். காயத்ரி மீதான கோபம் இத்தனை வாரங்கள் ஆகியும் நேயர்களிடம் குறையவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
இன்று காயத்ரி டிவிட்டரில் தன்னை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என கோபமாக ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
“ என் டிவீட்டுகளால் எரிச்சல் அடைபவர்கள், என்னை அன்-ஃபாலோ (தொடர்வதிலிருந்து விலகுங்கள்) செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமானவர்களையோ, உங்கள் ரோல் மாடலையோ ஃபாலோ செய்யுங்கள்” என கோபமாக ஒரு டிவீட் போட்டிருக்கிறார்.
அந்த டிவீட்டிலும் ரசிகர்கள் காயத்ரியைத் திட்டித்தான் பதில் கமெண்ட்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘பிக் பாஸ்’ முடிந்தாலும் நேயர்களின் கோபம் முடிவுக்கு வராது போலிருக்கிறது.