விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதைதான் இத் தொடர்.
ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. ஐபிஎஸ் அதிகாரி விக்ரம், ஒரு பயணத்தின் போது சத்யாவை பார்க்கிறார். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். விதியின் காரணமாக இருவரும் அதன் பிறகு சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாமல் போகிறது.
மற்றொருப் பக்கம் போலீஸ் அதிகாரியின் ஒரே செல்ல மகள் மற்றும் ஊர்க்காரர்கள் அனைவருக்கும் செல்ல மகளுமாக இருக்கும் சரண்யாவை, அதே ஊரில் இருக்கும் ரவுடி பாஸ்கர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளை வற்புறுத்தியும் மிரட்டியும் வருகிறான்.
விக்ரமின் தம்பி அர்ஜுனுக்கு சத்யா நிச்சயிக்கப்படுகிறாள். திருமணத்திற்கு முன்பாக தன் தம்பியின் வருங்கால மனைவியைக் காண போகும் விக்ரம் அதிர்ச்சியில் மனமுடைகிறார். சத்யாவினாலும் அதிர்ச்சியை ஏற்க முடியவில்லை.
விக்ரம் தனது தம்பிக்கு நிச்சயமாகிவிட்ட சத்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறார். ஆத்திரம் கொள்ளும் சத்யா, விக்ரமிடம் ஒரு சத்தியம் பெற்றுக் கொள்கிறார்.
தன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இதற்கிடையில் பாஸ்கரனால் பிரச்சனை அதிகமாகிறது.
போலீஸ் என்கவுண்டர் பிளான் செய்யப்படுகிறது. பாஸ்கரிடம் இருந்து சரண்யாவை காப்பாற்றுவாரா விக்ரம் ?, விக்ரம், சத்யாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவாரா? இப்படி பல்வேறு திருப்பங்களைச் சுற்றி கதை நகர உள்ளது.
கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் புகழ் அமித் பார்கவ் தான். இந்தக் கதையில் விக்ரமாக நடிக்கிறார். மேலும் செய்தி வாசிப்பாளர் சரண்யா இந்த தொடரின் மூலம் நடிகையாக தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.
பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கணேஷ் இந்த தொடரில் சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை அப்துல் ஹபீஸ் இயக்குகிறார். இளையவன் இந்தத் தொடருக்கு இசை அமைக்கிறார்.
பல திருப்பங்களும் விறுவிறுப்புகளும் கொண்ட இந்த புதிய தொடர் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.