விஜய் டிவியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக 400 பகுதிகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெடுந் தொடர் ‘ஆண்டாள் அழகர்’.
நேயர்களின் மனம் கவர்ந்த இத்தொடரினுடைய அடுத்த தலைமுறை ‘பகல் நிலவு’ என்கிற தலைப்பில் புத்தம் புதிய நெடுந் தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.
ரேவதியும் அவளது ஒரே மகன் கார்த்திக்கும் டெல்லியில் வசிக்கிறார்கள். டெல்லியில் கலெக்டராக இருக்கும் ரேவதிக்கு மதுரை கலெக்டராக பொறுப்பேற்க இடமாற்றம் வருகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் ரேவதி தான் யார் என்பது குறித்தும் ஊரிலுள்ள தனது குடும்பம், தனது திருமணம், கணவன் சக்திவேல் வேறொரு திருமணம் செய்து கொண்டது போன்றவை குறித்தும் தனது மகன் கார்த்திக்கிடம் கூறுகிறாள். இத்தனை நாட்களாக இந்த உண்மைகளை அறிந்திராத கார்த்திக் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.
தானும் ரேவதியுடன் மதுரைக்கு வருவதாகக் கூறுகிறான். ரேவதியும் அதற்கு சம்மதிக்கிறாள். ரேவதியும் கார்த்திக்கும் மதுரைக்கு வருகிறார்கள். ரேவதியின் பெற்றோரான முருகேசன் – வடிவு 20 வருடங்களுக்குப் பிறகு தங்கள் மகளையும் பேரனையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ரேவதி, கார்த்திக்கை தனது மாமனார் சிதம்பரத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்கிறாள். பேரனைப் பார்த்து சிதம்பரம் – விஜி நெகிழ்ச்சியடைகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் அமைச்சராக இருக்கும் சக்திவேலுக்கு பிரபாகரன் என்கிற மகனும் தமிழ்ச்செல்வி என்கிற மகளும் இருக்கிறார்கள். சக்திவேல் கலெக்டரை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வருகிறார். அங்கு ரேவதியைக் கலெக்டராக சந்திக்கும் சக்திவேல் அதிர்ச்சியடைகிறார். பல வருடங்களுக்குப் பிறகு ரேவதியைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர் அவளிடம் பேச முற்பட ரேவதி அவரைப் புறக்கணிக்கிறாள்.
ரேவதி திரும்பி வந்த விஷயம் அறிந்து மலர்விழி அதிர்ச்சியடைகிறாள். எக்காரணம் கொண்டும் ரேவதியைப் பார்க்கவோ பேசவோ கூடாது என அவள் சக்திவேலை எச்சரிக்கிறாள். சக்திவேல் தான் யார் என்று உண்மையை சொல்லாமல் கார்த்திக்குடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் கார்த்திக்கிற்கு சக்திவேல் தான் தனது அப்பா என்று தெரிய வர, அவன் அவரைப் புறக்கணிக்கிறான். அவரைத் தன் அப்பாவாக ஏற்க மறுக்கிறான். சக்திவேல் மகனை எண்ணி வருந்துகிறார்.
ஆண்டாள் – அழகர் தம்பதிக்கு ரேவதி-சக்தி என்ற இரட்டை மகள்கள் இருக்கிறார்கள். கார்த்திக், பிரபாகரன், ரேவதி-சக்தி ஆகியோர் மதுரையில் ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். கார்த்திக் – பிரபாகரன் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கிடையே வன்மம் வளர்கிறது.
ஆண்டாள்-அழகரின் மகள்களோடு பழகக் கூடாது என கார்த்திக்கை அவனது அம்மா ரேவதி எச்சரிக்கிறாள். அதே போல் மலர்விழியும் பிரபாகரனிடம் கூறுகிறாள். இருந்தும் கார்த்திக்-ரேவதி, பிரபாகரன்-சக்தி காதல் வயப்படுகிறார்கள். இத்தனை எதிர்ப்புகளையும் குடும்பப் பகையையும் மீறி இந்தக் காதலர்கள் இணைவார்களா ?, ரேவதி தன் கணவன் சக்திவேலை மன்னிப்பாளா ?, கார்த்திக் – பிரபா சகோதரர்களாக இணைவார்களா?, இரண்டு தலைமுறைகளில் நிகழ்ந்த காதல் திருமணங்களால் பிரிந்து கிடக்கும் குடும்பங்கள், மூன்றாவது தலைமுறைக் காதலால் இணையுமா?, என்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகளைத் தாங்கி வருகிறது ‘பகல் நிலவு’.
பாசம், நட்பு, காதல் போன்ற உணர்வுகளோடு குடும்ப உறவுகளின் உன்னதத்தைப் போற்றும் இந்த நெடுந்தொடர் வரும் மே 9 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மற்றும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.