தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறிப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மார்ச் 27ம் தேதிக்குப் பிறகு புதிய படங்களின் வெளியீடு இருக்குமா என்பது சந்தேகமே.
2018ம் வருடம் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தினர் இப்படி சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய படங்களைத் திரையிட மாட்டோம் என்று அறிவித்தனர். அதன்பின் ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் வெளியாகவில்லை. அப்போது திரையுலகத்தில் உள்ள பலரும் அந்த ஸ்டிரைக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அதை எதிர்த்தவர்களில் சிலர்தான் இப்போது ஸ்டிரைக் நடத்துவோம் என்று சொல்கின்றனர்.
சினிமாவிலும் மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் கதைதான்.
ஏற்கெனவே திரையுலகத்தைச் சேர்ந்த சிலரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி ஸ்டிரைக் நடத்த உள்ளார்கள். இது திட்டமிட்டபடி நடக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.