செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தினை இயக்கியவர் செளந்தர்யா ரஜினிகாந்த். அதற்கு முன்பு ரஜினியை வைத்து முழுக்க 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ‘கோச்சடையான்’ படத்தினை இயக்கியிருந்தார்.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு திரையுலகில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தார். ஆனால், நேரடியாக படம் இயக்கவில்லை.
தற்போது மீண்டும் இயக்குநர் ஆவதற்கு கதை ஒன்றை தயார் செய்திருக்கிறார். இதற்கான திரைக்கதை மெருக்கேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்தக் கதையின் நாயகனாக லாரன்ஸ் நடித்தால் சரியாக இருக்கும் என்று தீர்மானித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் செளந்தர்யா. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் திரைக்கதை வடிவத்தினை முடித்து, முழுக்கதையினையும் கூறவுள்ளார்.
அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.