’கூலி’ படத்திலிருந்து ரன்வீர் சிங் விலகிவிட்டால் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பினைப் பெற்றது. விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருகிறது.
இதனிடையே, ‘கூலி’ படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து, ஒரு வாரம் படப்பிடிப்பு செய்யலாம். அந்தக் காட்சி உங்களுக்கும், எனக்கும் திருப்தியாக இருந்தால் நடிக்கிறேன் என்றெல்லாம் ரன்வீர் சிங் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது ‘கூலி’ படத்திலிருந்து விலகியிருக்கிறார் ரன்வீர் சிங். ’ஹனுமான்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் அறிமுக டீசர் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முழுமையாக இதில் கவனம் செலுத்தவுள்ளதால் ‘கூலி’ படத்திலிருந்து விலகியிருக்கிறார் ரன்வீர் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரன்வீர் சிங் நடிக்கவுள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது படக்குழு.