சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டிய ரஜினி

‘அயலான்’ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அயலான்’. 

பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகே இந்தப் படம் வெளியானது. கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகளவில் தமிழில் மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“முதலில் “சிவா.. என்ன வொர்க்… என்ன வேலை… மை காட்..” என்று தான் தொடங்கினார். ‘எந்திரன்’ படத்தில் நடித்திருப்பதால் எவ்வளவு கடினமான படம் இது என்று தெரியும். இதில் பெரிய உழைப்பைப் போட்டு அற்புதமாக செய்திருக்கிறீர்கள். 

இந்த மாதிரியான படங்கள் பண்ணுவதற்கு ‘எந்திரன்’, ‘2.0’ தான் முன்னோடி என்று கூறினேன். அந்த 2 படங்கள் தந்த துணிச்சல் தான் இந்தமாதிரி ஒரு படம் பண்ண முடிந்தது என்று தெரிவித்தேன்.

‘அயலான்’ தொடங்கப்பட்ட போது ‘2.0’ வரவில்லை. ஆகையால் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஊக்கச்சக்தி என்றால் அது ‘எந்திரன்’ தான். 

அதே மாதிரி பிரம்மாண்டமாக, மகிழ்விக்கக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்று நினைத்து தொடங்கினோம்.

அப்போது “நீங்கள் தான் சிவா எனக்கு இப்போது முன்னோடி. ‘மாவீரன்’, ‘அயலான்’ மாதிரி புதிய கதைகளங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்று ரஜினி சார் சொன்னார். அந்த வார்த்தை எங்கள் அனைவருடைய உழைப்பையும் சந்தோஷப்பட வைத்த வார்த்தையாக நினைக்கிறேன். 

அனைத்து படக்குழுவினரையும் பாராட்டியதாக சொல்லச் சொன்னார். லவ் யூ தலைவா”

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Read Previous

விபீஷணனாக ஒப்பந்தம் ஆவாரா விஜய் சேதுபதி?

Read Next

தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணி உருவானது எப்படி?

Most Popular