தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தினை ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.
கமல் நடிக்கவிருந்த புதிய படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் ஹெச்.வினோத். ஆனால், கமல் தயாரிப்பில் வேறு ஏதேனும் நடிகரை வைத்து படம் இயக்குங்கள் என்று ஹெச்.வினோத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை.
மேலும், ஒப்பந்தமாக இன்னும் கமல் நிறுவனத்திலிருந்து ஹெச்.வினோத் வெளியே வரவில்லை.
கமல் படத்துக்குப் பதிலாக யாருடைய படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால், இறுதியாக தனுஷ் நடிக்கவுள்ள படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். தற்போது சேகர் கம்முலா இயக்கிவரும் படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ்.
‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பின் போதே, தனுஷிடம் கதை சொல்லி ஒ.கே செய்தார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிப்பதாக இருந்தது.
அப்போது தனுஷின் தேதிகள் தள்ளிப் போனதால், இடையே கமல் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் ஹெச்.வினோத். தற்போது கமல் படத்திலிருந்து விலகி, முதலில் ஒப்பந்தமான தனுஷ் படத்தையே இயக்கவுள்ளார்.
இது ‘சதுரங்கவேட்டை’ பாணியிலான கதை தான். அதே கதையை இன்னும் பெரிய பொருட்செலவில் செய்தால் எப்படி இருக்குமோ, அப்படியொரு கதையை தனுஷிற்காக எழுதியிருக்கிறார் ஹெச்.வினோத்.
தற்போது அந்தக் கதையினை மெருக்கேற்றும் பணியினை தொடங்கியிருக்கிறார். இந்தப் பணி முடிப்பதற்குள், கமலின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒப்பந்தம் ரத்தாகும் என்று எதிர்நோக்கியிருக்கிறார் ஹெச்.வினோத்.
தனுஷ் படத்தினை முடித்துவிட்டு, கார்த்தி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.