எகிறும் பட்ஜெட்: தவிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு

‘விடாமுயற்சி’ படத்தின் பட்ஜெட் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் தயாரிப்பு தரப்பு கலக்கத்தில் இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளது.

இறுதிகட்டப் படப்பிடிப்பும் கூட வெளிநாட்டில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ஏதேனும் ஒரு பிரச்சினையில் தொடர்ச்சியாக சிக்கி வருகிறது படக்குழு. முதலில் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இயக்குநரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

அஜர்பைஜான் நாட்டில் தான் இதன் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. முதலில் ஒரு பட்ஜெட் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், தற்போது அதைவிட பலமடங்கு அதிகரித்துவிட்டது. மேலும் இன்னும் இறுதிகட்டப் படப்பிடிப்பு, இறுதிகட்டப் பணிகள் எனவும் செலவு இருக்கிறது.

இதனால் லைகா நிறுவனம் பெரும் கலக்கத்தில் இருக்கிறது. ‘விடாமுயற்சி’ படத்தில் போடப்பட்ட முதலீடு கிடைத்துவிடுமா என்ற ஆலோசனையில் இருக்கிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. மேலும், சில உரிமைகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, வரும் இறுதிகட்டப் படப்பிடிப்பில் பட்ஜெட்டை குறைக்குமாறு இயக்குநரை கேட்டுக் கொண்டுள்ளது.

Read Previous

துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு? – பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?

Read Next

’கோட்’ அப்டேட்: மீண்டும் பாடகர் விஜய்

Most Popular