டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘பச்சை விளக்கு’.
இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க, மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குனர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுதியுள்ளனர்.
சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியுள்ள டாக்டர் மாறன் படம் பற்றி கூறுகையில்,
“டிராபிக் போலீசாருக்கு உதவி செய்யும் டிராபிக் வார்டன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளேன். சாலை விதிகளை இந்தக் காலத்தில் யாரும் மதிப்பதில்லை. அவற்றைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அப்படி சாலை விதி மீறலால் நடக்கும் ஒரு சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை. அது போலவே விதியை மீறிய ஒரு காதலால் என்ன நடக்கிறது என்பதும் படத்தில் உள்ளது. அவற்றோடு ஒரு பேய்க் கதையும் படத்தில் உள்ளது.
சாலை பாதுகாப்புப் பற்றிய படம் என்பதால் ‘நில் கவனி செல்லாதே’ எனப் பெயர் வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்கு பிலிம் சேம்பரில் அனுமதி கிடைக்கவில்லை. அடுத்து ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்றும் யோசித்தோம். அந்தப் பெயரில் சமீபத்தில் படம் வந்துவிட்டது. எனவே, ‘பச்சை விளக்கு’ என்ற பொருத்தமான தலைப்பை வைத்தோம்.
இப்படி ஒரு படத்தை எடுக்க எங்களுக்கு காவல்துறையினரும், ரயில்வே துறையினரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். லெவல் கிராசிங்கில் கூட மக்கள் காத்திருப்பதில்லை. நாங்களும் எவ்வளவோ சொல்கிறோம், மக்கள் கேட்பதேயில்லை என்கிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வந்தால்தான் மக்களுக்கும் விதிகளை மீறுவதன் ஆபத்து என்ன என்பது புரியும் என்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை திரைக்குக் கொண்டு வர உள்ளோம்,” என்கிறார் இயக்குநர் டாக்டர் மாறன்.
இப்படத்திற்கு சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளார். எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘டேஞ்சர் மணி’ சண்டைப் பயிற்சி அளிக்க, கே.நடராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக் கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.