ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
சுமார் 1700 கோடி வரை வசூலித்துள்ள இந்தப் படத்தை தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். டிசம்பர் 29ம் தேதி ஜப்பான் நாட்டில் இப்படம் வெளியாக உள்ளது.
அதைத் தொடர்ந்து சீனா, கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்திய அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் ஹிந்திப் படங்களை பின்னுக்குத் தள்ளிய படம் ‘பாகுபலி 2’. வெளிநாடுகளிலும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆனால், அதன் பின் சீனாவில் வெளியான ‘தங்கல்’ படம் அங்கு பெரும் வசூலைக் குவித்தது. எனவே, இந்திய அளவில் மட்டுமே ‘பாகுபலி 2’ படம் அதிக வசூலைப் பெற்ற முதல் படம் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது.
அடுத்து பல ஆசிய நாடுகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றால் ‘தங்கல்’ படத்தின் உலக வசூல் சாதனையை ‘பாகுபலி 2’ முறியடிக்க வாய்ப்புள்ளது.