24 எஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’.
‘வேலைக்காரன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் குடிசைப் பகுதி ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளன. அதற்காக சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோவில் குடிசைப் பகுதி அரங்கம், மிக யதார்த்தமாக அமைக்கப்பட்டு அங்கு படமாக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட அந்த குடிசைப் பகுதி செட் உருவான வீடியோவை வெளியிட்டனர்.
படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் அவ்வளவு பெரிய அரங்கை அற்புதமாக உருவாக்கி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அது குறித்து அவர் கூறுகையில்,
”கதைப்படி இப்படத்தின் கதாநாயகனும். நண்பர்களும் அந்த குடிசைப் பகுதி ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் பெரும் பகுதி அங்குதான் நடக்கின்றது.
தயாரிப்பாளர் R D ராஜா தான் இந்த முழு ஏரியாவையே செட்டாக போட்டுவிடலாம் என்றே யோசனையைத் தந்தார். இந்த செட்டிற்காக சுமார் பத்து முதல் பதினைந்து குடிசைப் பகுதிகளை, நேரில் சென்று பார்த்து, அங்கு வாழும் மக்களின் வாழ்வு முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு செட்டை உருவாக்கினோம்.
இந்த செட்டை முழுவதும் முடிக்க சுமார் ஐம்பத்தைந்து நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தைச் சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு யதார்த்த ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்கவேண்டுமென்பது எங்கள் நோக்கமாக இருந்தது.
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும். மேலும் எதார்த்தத்தைக் கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாக வடிவமைத்தோம்.
நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த ஏரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம். இந்த முழு செட்டையும் சுற்றி ஒரு கூவத்தையும் உருவாக்கியுள்ளோம்.
இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். தயாரிப்பாளர் R D ராஜாவின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலுமே இவ்வளவு பெரிய செட் சாத்தியமானது. இந்தப் படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு நிச்சயம் கொண்டு போகும்.
இயக்குனர் மோகன் ராஜாவின் கதை மற்றும் எழுத்து மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எங்கள் எல்லோரின் ஒட்டுமொத்த உழைப்பையும் பாராட்டி இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் கலை இயக்குனர் முத்துராஜ்.
‘வேலைக்காரன்’ டிசம்பர் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.