அழகு முகம் மறைந்துவிட்டது – வைரமுத்து இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து வைரமுத்து வெளியிட்டு இரங்கல் செய்தி…

“ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது.

ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். பல கோடிப் பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்து வரும் அழகு முகம் அவர்முகம்.

‘மூன்றாம் பிறை’யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல் முறை பார்த்தேன். நானெழுதி அவர் கடைசியாகப் பாடி நடித்த ‘புலி’ படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றி கொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.

அரை நூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது.

ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரைக்கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Read Previous

ஸ்ரீதேவி நடித்த படங்களின் இனிமையான பாடல்கள்…வீடியோ

Read Next

ஸ்ரீதேவி மறைவு – கமல்ஹாசன் இரங்கல் வீடியோ

Most Popular