இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான விருதை ‘மெர்சல்’ படம் வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து ‘மெர்சல்’ படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த துணை நடிகர் விருதுக்காக விஜய்யும் போட்டியில் இருந்தார். ஆனால், அவர் விருதுக்கு தேர்வாகவில்லை.
போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு ஜனவரி 15 முதல் ஆரம்பமாகி 20ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த வருட ஆல்லைன் வாக்குப்பதிவில் 24 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். மொத்தம் 18 பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது.
4வது தேதிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.
‘மெர்சல்’ படம் விருது பெற்றது தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையான ஒன்று.
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ 2017 தீபாவளியை முன்னிட்டு வெளியானது.