‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக தனி முத்திரை பதித்துள்ளவர் சாம் .சி.எஸ். தற்போது மோகன்லால் நடிக்கும் ‘ஓடியன்’ படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் மலையாளத் திரையுலகில் அவருடைய பயணத்தைத் தொடங்குகிறார்.
‘‘விக்ரம் வேதா’ ரிலீஸுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால், மோகன்லால் சாரின் ‘ஓடியன்’ படத்துக்குக் கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஓடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதைக் கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக் கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது.
வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் உள்ள மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்கத் தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம்.
மலையாளத்தில் மோகன்லால் படம் என்னுடைய முதல் படமாக அமைந்தது, அதோடு அந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறான, இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் படமாக அமைந்ததும் என்னை சொர்க்கத்தில் இருப்பது போல் உணர வைக்கிறது,” என்கிறார்.
படத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ‘ஓடியன்’ படக்குழுவினரையும் கவர்ந்து விட்டாராம் சாம்.
“கரு, கொரில்லா, அடங்க மறு, மிஸ்டர் சந்திரமௌலி, வஞ்சகர் உலகம்”, மேலும் சில படங்கள் என அடுத்தடுத்த பல புதிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் இந்த வளரும் இசையமைப்பாளர்.