‘முதல்’ பாட்டை மீண்டும் பாடிய கே.ஜே.யேசுதாஸ்

1963ம் ஆண்டு  வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மை’ படத்தில் இடம் பெற்ற ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை…’ என்ற பாடல்தான் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் முதல் பாடலாகும்.

இந்த பாடலை ஏறக்குறைய 49 வருடங்கள் கழித்து மீண்டும் பாடியிருக்கிறார் கே.ஜே.யேசுதாஸ். ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, நவீன் இயக்க, நடராஜன் சங்கரன் இசையமைக்கும் ‘மூடர் கூடம்’ படத்திற்காக இந்த பாடலை மீண்டும் பாடியிருக்கிறார்.

இது பற்றி இயக்குனர் நவீன் கூறும் போது, “ மூடர் கூடம் படத்திற்காக கிளைமாக்ஸ் பாடல் ஒன்று, வாழ்க்கையின் தத்துவத்தை விவரிக்கும், தத்துவப் பாடலாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்.  பொம்மை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எங்களது கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என யோசித்தோம். எனவே இந்த பாடலை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து, இந்த பாட்டை ரீமிக்ஸ் செய்து ட்ராக்காக பதிவு செய்தோம்.

பின்னர் வீணை எஸ். பாலசந்தர் அவர்களின் மனைவியிடமும், மகனிடமும் போட்டுக் காண்பித்து எங்களது யோசனையை தெரிவித்தோம். அவர்களும் சம்மதித்தார்கள். அதன் பின்னர்,  எங்களைப் போன்ற சிறு தயாரிப்பாளர்கள், யேசுதாஸ் சாரை அணுகுவது சிரமமாக இருக்கும் என நினைத்து, அவர் மகன் விஜய் யேசுதாஸை அணுகி ட்ராக்கை போட்டுக் காட்டினோம்.

விஜய் யேசுதாஸுக்கு ட்ராக் மிகவும் பிடித்துப் போக, அவரே கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்கு ட்ராக்கை போட்டுக் காட்ட அவரும் பாடுவதற்கு சம்மதித்தார்.

கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் இந்த பாடலை 20 நிமிடங்களில் பாடி முடித்து, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரையும் பாராட்டினார்.  மறக்க முடியாத ஒரு பாடலை மீண்டும் இன்றைய தலைமுறையினருக்கு வழங்குவதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நிச்சயம் இப்பாடல் இசை ரசிகர்களை உருக வைக்கும் என்று நம்புகிறோம், ” என்றார்.

Read Previous

நானும் திறமைசாலிதான் – தீக்ஷா சேத்

Read Next

மாற்றான் படத்திற்கு ‘U’

Most Popular