‘தேன் கூடு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய இகோர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி.ஆனந்தன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், இயக்குனர்கள் அமீர், ஆர்.கே.செல்வமணி, எஸ்.பி.ஜனநாதன், புகழேந்தி தங்கராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, புலவர் புலமைப்பித்தன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
விழாவில் இயக்குனர் அமீர் பேசும் போது, “கனடா போன்ற நாடுகளில் திரைப்பட சூப்பர் ஸ்டார்களைக் கொண்டாடிய நிலை இன்று மாறிவிட்டது. இன்று அவர்களின் ஒரே சூப்பர் ஸ்டார் சீமான் தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இழந்த சுகங்களை மீட்டெடுப்பதற்கு தகுதிபெற்ற சிலரில் சீமானையும் ஒருவராகப் பார்க்கின்றனர்.
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ‘ஆதிபகவன்’ படத்தின் வெளியீட்டு விழாவில் சீமான் அவர்களின் வாழ்த்துச் செய்தியை வீடியோவாக போட்ட போது, அங்குள்ள மக்களின் கைதட்டல்களே இதற்குக் கிடைத்த நேரடி சாட்சி” என்றார்.