‘இளைய தளபதி’ என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தமிழ்த் திரையுலகில் ‘ஹீரோவாக’ அறிமுகமாக இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன.
விஜய் ஹீரோவாக நடித்த ‘நாளைய தீர்ப்பு’ 4 டிசம்பர் 1992ம் ஆண்டு வெளியானது.
இப்படத்திற்கு முன்னதாக அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ஒரு சில படங்களில் அவர் சிறுவனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்குப் பின் விஜயகாந்த்துடன் விஜய் இணைந்து நடித்த ‘செந்தூரபாண்டி’ திரைப்படம் அவரை பல ரசிகர்களிடம் சென்றடைய வைத்தது.
தொடர்ந்து அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த, ரசிகன், தேவா, விஷ்ணு ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து அவரை ஒரு நாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள உதவியது.
அதே சமயத்தில் அப்போதே அஜித்துடன் இணைந்து ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்டத்தில் நடித்தார். 1995ல் இப்படம் வெளியானது.
விக்ரமன் இயக்கத்தில் 1996ல் வெளிவந்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் அவரை ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். ஒன்ஸ் மோர் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்தார்.
1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளிவந்த ‘காதலுக்கு மரியாதை’ மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
அடுத்து வெளிவந்த நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ப்ரியமுடன் படத்தில் ஒரு நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருந்தார்.
2000ம் ஆண்டில் வெளிவந்த குஷி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இன்று வரை தொலைக்காட்சியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் இப்படத்தை பலரும் பார்த்து ரசிப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ப்ரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, தமிழன், யூத், போன்ற வித்தியாசமான சில கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் நடித்தார்.
பகவதி திரைப்படத்தின் மூலம் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
அந்த ஆக்ஷன் ஹீரோவை வெற்றிப் படிக்கட்டுகளில் மேலும் உயர்த்திய படமாக ‘திருமலை’ அமைந்தது.
தொடர்ந்து கில்லி, மதுர, திருப்பாச்சி, சச்சின், சிவகாசி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இதன் மூலம் தமிழின் மிகப் பெரிய ஓபனிங் ஸ்டார் என்ற பெருமையும் அவருக்கு வியாபார ரீதியாக கிடைத்தது.
அடுத்து வெளிவந்த ‘போக்கிரி’ அவருடைய ஆக்ஷன் நடிப்பில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’, சமீபத்தில் வெளிவந்த ‘துப்பாக்கி’ ஆகிய இரு படங்களுமே நல்ல வெற்றிப் படங்களாக அமைந்தன.
அடுத்த வீட்டுப் பையன் போன்ற தோற்றமும், இயல்பான நடிப்பும், திறமையான நடனமும் விஜய்யை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டு சேர்த்து வருகிறது.
ஆரம்ப காலங்களில் காதல் நாயகனாக வலம் வந்தவர், பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி, நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தும் ஒரு நடிகராக மாறி இன்று வியாபார ரீதியிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
விஜய்யின் வெற்றி தொடர SCREEN 4 SCREEN ன் வாழ்த்துக்கள்…