விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டில் எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக இன்று காலை கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“இந்த படத்திற்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் உங்களுக்கு நான் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு கூட எனக்கு இல்லாமல் போய்விடும்.
நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம். நாட்டுக்கான எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறேன். மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான்.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். எனக்கு மனித நேயம் முக்கியம். மனதில் பட்டதை எப்போதும் தைரியமாக வெளிப்படுத்துவேன்.
ஒரு வேளை தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால், தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால், வேறு நாட்டைத் தேடிப் போவேன்.
என்னிடம் இப்போது எதுவும் இல்லை, இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலரும் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை , தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவுமில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார்.
இதனிடையே தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.