விஸ்வரூபம் பிரச்சனை – இயக்குனர் அமீர் வேண்டுகோள்

viswaroopam விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனை மேலும் வளர்ந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது பின்வருமாறு, “விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர்நீதி மன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில் படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் , கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வரும் செய்திகயறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே, கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும்.

நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும.

தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும்.

இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமல்ஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்தது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது.

கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதச்சார்ப்புள்ள மாநிலமாக கருதக்கூடாது. நான் உட்பட அனைவரும் தமிழகத்தை மதச்சார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகவும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே, தாங்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல் காப்பதுடன், இந்த பிரச்சனை மேலும் உயிர்பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.”

Read Previous

‘விஸ்வரூபம்’ பிரச்சனை – கமல் வேதனை…

Read Next

விஸ்வரூபம் – மீண்டும் தடை