காதல், காமெடி, கல்லூரி கலாட்டாவுடன் மணிவண்ணன் இயக்கும் அடுத்த படம் ‘தாலாட்டு மச்சி தாலாட்டு’!
அமைதிப் படை -2 படத்துக்குப் பிறகு முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இளமை குறும்பு, காமெடி, காதல், சென்டிமென்ட் என ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார் மணிவண்ணன்.
மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார் மணிவண்ணன்.
மணிவண்ணனுடன் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் தொடர்கின்றனர்.
படம்குறித்து இயக்குநர் மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில், “இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். தலைப்பு ஏன் அப்படி வைத்துள்ளோம் என்பதை படம் பார்க்கும்போது புரிந்து ரசிப்பார்கள்.
நல்ல குடும்பப் பிண்ணனி கொண்ட, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஒரு இளைஞனும் அதே கல்லூரியில் படிக்கும் பெண்ணும் காதலிக்கிறார்கள்.
ஆனால் அந்தக் காதலையும், குடும்பத்தினரின் அன்பையும் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. காரணம் ஒரு குழந்தை. மற்றவற்றை படத்தில் பாருங்கள். அனைவரும் ரசித்து இந்தப் படத்தைப் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது,” என்றார்.