சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது,
‘‘ஆணும், பெண்ணும் நிகரெனக்கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்’’ என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவி திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் என பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
பெண் சிசுக்கொலையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், எனது ஆட்சி காலத்தில் 1992–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1,500 ரூபாய்க்கான வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001–ம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200 வைப்புத்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்த தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். தற்போது இந்த தொகை முறையே ரூ.50 ஆயிரம் என்றும், ரூ.25 ஆயிரம் என்றும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 1992–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பெறும் முதிர்வுத்தொகை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும்; இவர்களுக்கு தற்போது திருமண உதவி திட்டத்தின் பயன் அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு மற்ற திருமண உதவி திட்டங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, இவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் கல்வி தகுதிக்கேற்ப திருமண உதவித்தொகையும் வழங்கப்படும்.
இது மட்டுமல்லாமல், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளின் வைப்புத்தொகைக்கான முதிர்வுத்தொகை அவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்பட்டு வந்தது. இக்குழந்தைகளின் உயர் கல்விக்கு பயனளிக்கும் வகையில், இந்த முதிர்வுத்தொகை இனிமேல் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்படும். இதனால், நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள்.
இதே போன்று, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரத்தில் ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.