நடிகர் அர்ஜுன் ‘ஜெய்ஹிந்த் – 2’ படம் மூலம் மீண்டும் இயக்குனராகிறார். இந்த படத்தை பத்திரிகையாளர்களுக்கும் , முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு வெளிவந்த ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குனரானவர் நடிகர் அர்ஜுன். தொடர்ந்து ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக இவர் இயக்கிய படம் ‘மதராஸி’ 2006ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘ஜெய்ஹிந்த் -2’ படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகிறது. ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்த சுர்வீன் இந்த படத்திலும் அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார். மேலும், நான்கு மாணவர்களும், நான்கு பெண்களும் இப்படத்தில் அறிமுகமாகவிருக்கிறார்கள்.
20 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா வசனம் எழுதுகிறார். ஜெகன் இணை இயக்கத்தை கவனிக்க, கேகே படத்தொகுப்பையும், வேணு ஒளிப்பதிவும் செய்கிறார்கள். சண்டைப் பயிற்சியை பவர் பாஸ்ட் செய்கிறார். மேலும், வெளிநாட்டு டெக்னீஷியன்களும் படத்தில் இடம் பெறுகிறார்கள்.
படத்தைப் பற்றி அர்ஜுன் கூறுகையில், “ இந்தப் படத்தை பத்திரிகையாளர்களுக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். தற்போதைய கல்வி முறையையும், அதன் குறைபாடுகளையும் சொல்லும் படமாக இப்படம் இருக்கும்.
கலாம் அவர்களின் கனவான அனைவருக்கும் கல்வி, இந்தியாவை சூப்பர் பவராக்கும் திட்டம் ஆகியவற்றை இப்படம் பிரதிபலிக்கும்.
ஜெய்ஹிந்த் – 2 படத்திற்கும் இதன் முந்தைய பாகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது முற்றிலும் வித்தியசமானதாக இருக்கும்.
சென்னை, மும்பை, டெல்லி, மற்றும் வெளிநாட்டிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது, ” என்றார் அர்ஜுன்.