என்டர்டயின்மெண்ட் அன்லிமிடெட் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மறுமுகம்’.
சஞ்சய் தயாரித்திருக்கும் இப்படம் ஒரு க்ரைம் திரில்லர் படம். டேனியல் பாலாஜி, அனுப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், சுவாமிநாதன், உமா பத்மநாபன், இசாக், லட்சுமி, கிஷிராஜ், ஷிலிப் சுக்லா நடித்திருக்கிறார்கள்.
ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.டி.அண்ணாத்துரை எடிட்டிங், ஷிவா யாதவ் கலை. பாடல்களை ஏக்நாத், ப்ரவீன் எழுதி உள்ளனர். ‘ஊமை விழிகள்’ ஆர்.அரவிந்த்ராஜ் உதவியாளர் கமல் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார்.
‘மறுமுகம்’ படத்தின் பாடல்கள் முதன் முறையாக செல்போனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இலவசமாக கேட்கலாம். தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் வெளியிட நடிகர் பரத் பெற்றுக் கொண்டார். பாடல்களை இயக்குனர்கள் மணிவண்ணன், கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்டார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் ஆபாவாணன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், நடிகர்கள் பரத், பானுசந்தர், ‘ஐஸ்’ அசோக், ‘முருகா’ அசோக், சஞ்சய், ப்ரவின் அனுப், நடிகைகள் ப்ரீத்தி தாஸ், லட்சுமி, உமா பத்மநாபன், இசை அமைப்பாளர் அகஸ்தியா, எடிட்டர் ஆர்.டி.அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு தனி மரியாதை ஏ-ற்படுத்திக் கொடுத்த ஆபாவாணன் தலைமையிலான ‘ஊமைவிழிகள்’ படக் குழுவினருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது. காரணம் ‘மறுமுகம்’ திரைப்படக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
விழாவில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசும் போது, சினிமா அழிந்து விடும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். ஆனால் அது என்றைக்குமே அழியாது. அழியும் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். ஒரு காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட் மட்டும்தான் இருந்தது. இப்போது விஸ்காம், டிகிரி என்று விரிவடைந்திருக்கிறது. அதில் சேர்வதற்குகூ ட சிபாரிசும், பணமும் தேவைப்படுகிறது.
எனவே சினிமா முன்பை விட வளர்ந்திருக்கிறது என்று பொருள். அதனால் இளைஞர்கள் தைரியமாக சினிமாவுக்கு வரலாம் வெற்றி பெறலாம். சினிமா போன்று ஈர்ப்பான துறை வேறு இல்லை. அரசியல் அதற்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. மறுமுகம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது, “இப்போது இளைஞர்கள் நிறையபேர் சினிமாவுக்கு வருகிறார்கள். புதிதாக படங்கள் தருகிறார்கள் சந்தோஷமாக இருக்கிறது. காமெடி படங்கள் இப்போது ஒரு டிரண்டாக இருக்கிறது அது விரைவில் மாறிவிடும். காமெடி ஒரு சுவை. அதுவே சினிமாவாகி விட முடியாது. சினிமா வியாபாரம் விரிவடைந்திருக்கிறது. எப்.எம்.எஸ். சேனல் ரைட்ஸ் என்று வருமான வழி கூடியிருக்கிறது.
நான்கு பேர் சேர்ந்து படம் எடுத்தால் லாபம் சம்பாதிக்கலாம். நஷ்டம் அடைந்தாலும் பங்கு போட்டுக் கொள்ளலாம். இன்றைய இளைஞர்களோடு பணியாற்றுவேன். அவர்கள் வெற்றியிலும் பங்கு கொள்வேன். அதற்குள் சாகமாட்டேன். எந்த சந்து பொந்து வழியிலாவது சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பேன். எனக்கு வேறு தொழில் தெரியாது. வீட்டுக்கு முன்னால் பொட்டிக் கடை வைத்து கொடுத்தால்கூ ட லாஸ் பண்ணிடுவேன்.
என்னை சினிமாவை விட்டு விரட்ட முடியாது. இந்த கேட் வழியாக விரட்டினால் வேறு கேட் வழியாக வந்து விடுவேன். காரணம் இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சினிமா என்பது கனவு வியாபாரம். நம் கனவும் ரசிகன் கனவும் ஒன்றாக அமைந்தால் படம் வெற்றி பெறும். மாறாக நாம் காணும் கனவை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரசிகனை டார்ச்சர் பண்ணக்கூடாது,” என்றார்.