மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அனைவரது பாராட்டுதல்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் இளையராஜாவின் இசையமப்பு படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்துள்ளது. சமீப காலங்களில் இப்படி ஒரு இசையை பார்த்ததில்லை என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மிஷ்கின் அளித்த பேட்டியில் ‘இளையராஜா எனக்கு அப்பா போன்றவர்’ என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நந்தலாலா’ படத்திற்காக இளையராஜா எனக்கு அழகான ஆறு பாடல்களை கொடுத்திருந்தார், ஆனால், நானோ அந்த படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தேன். அதற்காக அவர் மனவருத்தம் அடைந்திருப்பார் என எனக்குத் தெரியும்.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் கதையை எழுதி முடித்ததும், அதிலுள்ள மனக் கிளர்ச்சிகளை, இசையால் மட்டுமே கொண்டு போய் சேர்க்க முடியும் என முடிவெடுத்தேன்.
அதை ஒருவரால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதும் தெரியும், அவர்தான் இளையராஜா. அவரை, நேராகச் சென்று பார்த்தேன்.
படத்திற்கு எத்தனை பாடல்கள் வேண்டும் என்று கேட்டார். படத்தில் பாடல்களே இல்லை என்றேன்.
சத்தமாக சிரித்து, “எனக்குத் தெரியும், நீ ஒரு வீபரீதமான குணம் கொண்டவன், ” என்றார்.
அவருக்கு படத்தின் கதையைச் சொன்னேன், மிகவும் நேசித்தார். எப்பேர்ப்பட்ட கிரியேட்டர் அவர், மிகவும் தயாள குணம் கொண்டவர், அதனால்தான் படத்திற்கு இப்படிப்பட்ட இசையை அளித்துள்ளார்.
இரண்டரை மணி நேர படத்தை உயர்த்திப் பிடித்துள்ளார்.
எப்போதும் ராஜா சாருடன் நல்ல உறவை பகிரிந்து கொள்வேன். அவரை எப்போதும் ‘அப்பா’ என்றே அழைப்பேன், ” என்று மிஷ்கின் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன்,பாரதிராஜா மணிரத்னம், பாலா போன்றவர்கள் சந்தர்ப்பத்திற்கேற்ற விதத்தில் இசையமைப்பாளரை மாற்றி விட்டாலும், சிறந்த படத்திற்கு, சிறந்த இசையமைப்பை இளையராஜாவால் மட்டுமே வழங்க முடியும் என்பதை மிஷ்கின் நன்றாகவே நிரூபித்துள்ளார்.
இளையராஜாவின் ரசிகர்கள் மத்தியில் மிஷ்கினின் மதிப்பு இந்த படத்தின் மூலம் மேலும் உயர்ந்து விட்டது.